சினிமா
அநுர அரசின் எம்பிக்களுக்கு கிடைத்த ஏமாற்றம்
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம் வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் மீளப்பெறப்பட்டுள்ளதாக அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு உத்தியோகபூர்வ வாகனத்தை வழங்குவதற்கு பதிலாக அவர்கள் பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
ஆளும் அரசின் எம்பிக்களுக்கு வாகனம் வழங்குவது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கு எதிரானது என கிளர்ந்த எதிர்ப்பை அடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம் வழங்கும் முடிவை அரசாங்கம் மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு அமைச்சுக் கடமைகளுக்காக உத்தியோகபூர்வ வாகனம் வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடரும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் உத்தியோகபூர்வ வாகனம் வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்ததுடன், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனத்தை போன்று தாங்களும் வாகனத்தை கோரவுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
உத்தியோகபூர்வ தேவைகளுக்காக தாம் தெரிவு செய்யப்பட்ட தொகுதிக்கு செல்வதற்கு வாகனம் தேவைப்படுவதால் அரசாங்கம் வழங்க தீர்மானித்த உத்தியோகபூர்வ வாகனத்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு தெரிவித்திருந்தது.
இதேவேளை, கடந்த அரசாங்கங்களினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்த வரியில்லா வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை இந்த அரசாங்கம் வழங்காது என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
5 வருடங்களுக்கு ஒருமுறை அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டாலும் இம்முறை அவ்வாறான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்களுக்கு புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.