இலங்கை
13 பற்றி கதைக்கும் தருணம் இதுவல்ல! அநுர அரசிடம் சஜித் அணி விடுத்துள்ள வேண்டுகோள்
13ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைப்பதற்கான தருணம் இதுவல்ல எனவும் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“13,14,15 என கதைத்துக்கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல. நாட்டுக்குப் புதியதொரு அரசமைப்பு அவசியம்.
நாடாளுமன்றத்தில் இதனை செய்வதற்குரிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் தேசிய மக்கள் சக்திக்கு கிட்டியுள்ளது. அதேபோல வடக்கையும், கிழக்கையும், மலையகத்தையும்கூட பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது.
மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அக்கட்சியில் உள்ளனர். புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி கொண்டுவர வேண்டும்.
அதற்குரிய ஆதரவை நாம் வழங்குவோம். ஒரு வருட காலப்பகுதிக்குள் இதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சர்வகட்சி பொறிமுறை ஊடாக இதற்கான பணியை முன்னெடுத்தால் நல்லது” எனக் கூறியுள்ளார்.