இலங்கை
ரணிலுக்கு வெளிநாட்டு உணவு என்ற தகவலை மறுத்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி
ரணிலுக்கு வெளிநாட்டு உணவு என்ற தகவலை மறுத்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு சமையல்காரர்கள், வெளிநாட்டு உணவு மற்றும் மேலதிக பாதுகாப்பு என்பவற்றை கோரவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் விலக்கிக்கொள்ளப்பட்ட விக்ரமசிங்கவின் பாதுகாப்பு, மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்த கருத்தை கட்சி நம்புவதாகவும், விஜேவர்தன விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சேறு பூசும் பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் அவை முற்றிலும் தவறானவை என்று ருவான் விஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியோ அல்லது அவருடைய துணைவியார் மைத்திரி விக்ரமசிங்கவோ ஜனாதிபதி மாளிகையை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தவில்லை.
அவர்கள் அதை உத்தியோகபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தினர். அதேநேரம் வெளிநாட்டு சமையல்காரர்களை அழைத்து வெளிநாட்டு உணவுகளை உட்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டும் முற்றிலும் தவறானது.
இது துரோகத்துடன் வெளியிடப்பட்ட செய்திகளாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஜனாதிபதி மாளிகையின் சமையல் கூடம் என்று பரப்பப்பட்ட காணொளியும் முற்றிலும் தவறானது. இது அறிவு குறைந்தவர்களால் இது பகிரப்படுகிறது என்று விஜயவர்த்தன விளக்கமளித்துள்ளார்.
இது, தேசத்திற்காக சேவையாற்றிய விக்ரமசிங்கவின் குணாதிசயத்தை படுகொலை செய்யும் முயற்சி என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.