இலங்கை
யாழில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பூங்கா: கனடாவில் உள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு!
யாழில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பூங்கா: கனடாவில் உள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு!
யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறையில் 500 மில்லியன் டொலர் பெறுமதியான கைத்தொழில் பூங்காவை (Industrial Park) நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
கனடாவில் (Canada) உள்ள இலங்கையர்களுடன் இந்த நடவடிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் அரச சீமெந்து தொழிற்சாலை உள்ள 700 ஏக்கர் காணியில் இந்த கைத்தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முதலீட்டாளர்கள் சுமார் 500 மில்லியின் டொலர்களை வழங்கவுள்ளனர்.
கனடாவில் உள்ள இலங்கையைச் சேர்ந்த தொழில்முனைவோர் கைத்தொழில் பூங்காவை அமைப்பதற்கான பாதை மற்றும் பிற உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மேற்கொள்வார்கள்.
இந்த பூங்காவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்ப்பதன் மூலம் அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.