ஒன்றுடன் ஒன்று மோதிய 40 வாகனங்கள்: ஜேர்மனியில் நிகழ்ந்த தொடர் விபத்துக்கள்
நேற்று முன்தினம் ஜேர்மனியில் நிகழ்ந்த தொடர் விபத்துக்களில் இரண்டு பேர் பலியானார்கள், 31 பேர் காயமடைந்துள்ளார்கள்.
நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணியளவில், ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் Nuremberg நோக்கிச் செல்லும் A3 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்துக்களில் 40 வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
கனமழை காரணமாக ஒரு இடத்தில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட, பின்னால் வந்த கார்கள் அந்த இடத்தில் குவிய, கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது.
இரண்டாவது விபத்தில் மூன்று வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
மூன்றாவது விபத்து 30 நிமிடங்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது, அந்த விபத்தில், நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது, பின்னால் வேகமாக வந்த கார்கள் மோதியுள்ளன.
ஆக மொத்தத்தில் 40 வாகனங்கள் விபத்துக்குள்ளாகி நிற்க, நெடுஞ்சாலையே மூடப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களின்போது, இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள், 31 பேர் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், பொலிசார் இந்த விபத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
Comments are closed.