தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஸ்ரீலீலா விரைவில் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாகவும் முதல் படமே அவர் மாஸ் நடிகருடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ஸ்ரீலீலா அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் தெலுங்கு திரை உலகில் அவர் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார் என்பதும் கடந்த சில ஆண்டுகளாக அவர் முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. குறிப்பாக மகேஷ் பாபு உடன் இணைந்து அவர் நடித்த ’குண்டூர்காரம்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தெலுங்கில் தற்போது அவர் நம்பர் ஒன் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது தமிழிலும் அவரை கொண்டு வர சில தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 69’ திரைப்படத்தில் அவர்தான் நாயகி என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை தயாரிக்க இருப்பது தெலுங்கு திரைப்படம் நிறுவனமான டிவிவி என்ற நிறுவனம் என்ற நிலையில் இந்நிறுவனம் விஜய்யுடன் நடிக்க ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனரே இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் ஸ்ரீலீலா தான் நாயகி என்று முடிவு செய்திருப்பது திரை உலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல் படமே விஜய் போன்ற மாஸ் நடிகரின் படத்தில் ஸ்ரீலீலா நடிப்பதால் அவர் தெலுங்கு போலவே தமிழிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.