இலங்கை
கோட்டாபய உண்மையிலேயே பல உயிர்களை காப்பாற்றினார்
கோட்டாபய உண்மையிலேயே பல உயிர்களை காப்பாற்றினார்
எதிர்பாராவிதமாக கோவிட் தொற்றினால் தாம் பின்னடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அப்போது கோட்டாபய ராஜபக்ச உண்மையிலேயே உயிர்களை காப்பாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ஜனாதிபதி மகுடத்திற்காக பலதரப்பினர் முயற்சித்து வருகின்றனர். விவசாயிகள் முயற்சிக்கின்றனர், வியாபாரிகள் முயற்சிக்கின்றனர், ஊடக பிரதானிகள், முன்னாள் ஜனாதிபதிகளின் பிள்ளைகள் என பலதரப்பும் முயற்சிக்கின்றனர்.
ஆனால் நாம் யதார்த்த நிலையினை புரிந்து கொள்ள வேண்டும். பிரதான கட்சிகள் இன்றி ஏனைய கட்சிகளுக்கு அதிகாரம் வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது மக்கள். அவர்கள் எங்கள் வீடுகளுக்கு தீ வைத்தவர்களாக இருக்கட்டும், இந்நாட்டை அழித்தவர்களாக இருக்கட்டும் அதற்கு மக்களுக்கான உரிமைகள் உண்டு.
ஆதனால் நாம் ஒருபோதும் குறிப்பிட்ட சிலருக்கு பயந்து அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டியதில்லை. நாம் தீர்மானிக்க வேண்டியது, இந்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே அன்றி அரசியல் கட்சிகளுக்கு பயந்து அல்ல என்பதை நான் நம்புகிறேன்.
எனது அரசியல் பயணத்தை மக்கள் தீர்மானிப்பார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்கிறேன். முன்னிற்க வேண்டிய இடங்களில் முன்னிற்பேன். இப்போது எடுக்க வேண்டிய தீர்மானங்களை நாம் எடுப்போம். தனிப்பட்ட அரசியலை ஒதுக்கிவைப்போம்.
உண்மையிலேயே நாடும் மக்களும் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் நிறையவே உள்ளன. சிலர் மக்களை குறை கூறுகின்றனர், சிலர் 75 வருட அரசியலை குறை கூறுகின்றனர், இன்னும் சிலர் ராஜபக்ச குடும்பத்தினால் தான் 75 வருட சாபம் எனக் கூறுகின்றனர்.
எமது குடும்பம் 55 வருட 100 வருட அரசியலில் ஈடுபட்டுள்ளது. ஆனால் 75 வருடம் ஆட்சி செய்ததில்லை. மகிந்த ராஜபக்ச ஆட்சியை கைப்பற்றும் போது 17 பில்லியன் பொருளாதாரத்தையே 2005ம் ஆண்டு பொறுப்பேற்றார். யுத்தத்துடன் கூடிய ஒரு பொருளாதாரத்தையே பொறுப்பேற்றார்.
கடந்த காலங்களில் எதிர்பாரா விதமாக கோவிட் தொற்றினால் நாம் பின்னடைந்தோம். சவால்களுக்கு நாம் முகங்கோடுத்தோம். உரப் பிரச்சினை, நாடு மூடப்பட்டமை போன்ற பிரச்சினைகள் எழுந்தன.
அப்போது கோட்டாபய ராஜபக்ச உண்மையிலேயே உயிர்களை காப்பாற்றினார். எமது குடும்பம் இந்த வருடத்துடன் 98 வருடங்கள் இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டுள்ளன. எனக்கு பின் வரும் பரம்பரையும் அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் என குறிப்பிட்டுள்ளார்.