இலங்கை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்ட பெண்
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பெண் அதிகாரி ஒருவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெளிநாட்டில் இயங்கி வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் மூத்த சகோதரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 வயதான சந்தேக நபர் கொழும்பில் விசா ஆலோசனை அலுவலகம் ஒன்றையும், கட்டட நிர்மாண நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி நான்கு பிள்ளைகளுடன் தன்னை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் பின்னர், அவர் உயிரிழந்த பெண்ணுடன் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாகவும், பெண் கொலை செய்யப்பட்ட நாள் காலை முதல் அவருடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார்.
செவ்வாய்கிழமை மதியம் கொலை செய்யப்பட்ட பெண் தன்னுடன் வர மறுத்து முச்சக்கர வண்டியில் செல்ல முற்பட்டதால் ஆத்திரம் காரணமாக தனது காரில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து கழுத்தை அறுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இருப்பினும் அவரை கொல்லும் நோக்கத்தில் தான் தாக்கவில்லை என்றும், பின்னர் அவர் இறந்துவிட்டதை அறிந்ததாகவும், அதனை தொடர்ந்து வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதேவேளை, சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.