இந்தியா
தமிழீழம் தொடர்பில் விஜயகாந்தின் நெகிழ்ச்சியான பார்வை
கோவிட் தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சில தினங்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருந்தார்.
தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தே.மு.தி.க. தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இன்று வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி விஜயகாந்தின் உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தினுடைய தமிழ் மொழி மீதான பற்றானது அளப்பரியது. குறிப்பாக ஈழத்தமிழர் மீதான பற்று குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் தனது 13 வயதில் மதுரையில் நடைபெற்ற 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக தகவலும் சொல்லப்படுகிறது.
சிறுவயதிலேயே தமிழ்மீது கொண்ட அந்தப் பற்றுதான் திரைக்கலைஞனான பின்னும் வளர்ந்து, தமிழர்களுக்காகப் போராடவும் தூண்டியது. குறிப்பாக, 1980களின் பிற்பகுதியில் இலங்கையில் ஈழத்தமிழர்கள்மீது இலங்கை இராணுவம் மேற்கொண்ட கொடூரமானத் தாக்குதலில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதைக் கண்டு கொதித்தெழுந்த விஜயகாந்த், ஈழத்தமிழர்கள் மீதானப் படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தியிருந்தார்.
1984களில் ஒரு நாள்.ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை விளக்கி சென்னை முழுவதும் தீவிர பிரச்சாரத்திலும், உண்டியல் குலுக்கி தொழிற்சாலைகள், வர்த்தக நிலையங்கள்,வீடுகளில் நிதி சேகரிப்பிலும் போராளிகளாக ஈடுபட்ட வேளை, ” புரட்சி நடிகர் வீட்டுக்கும் செல்கிறோம்.
எங்களை பேசவிடவில்லை. இராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் ஊமை விழிகள்திரைப்பட ஒரு காட்சிக்கான வருமானம் முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
ஒவ்வொரு ஒற்றை ரூபாய்க்கும் உண்டியல் குலுக்கிய எங்கள் மனங்களில் அந்த மகான் நிறைந்து நின்றார். இன்றுவரை நிக்கிறார்.
மேலும், இந்தப் படுகொலையை நிறுத்தவேண்டும், ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் எனக்கோரி அப்போதைய தமிழ்நாடு ஆளுநரிடம் மனுவொன்றையும் வழங்கியிருந்தார்.
பின்னர், 1986ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அதை தடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தது மட்டுமல்லாமல் தமிழ்நாடு முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்திருந்தார்.
குறிப்பாக, 1989களில் மண்டபம் முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு நேரில்சென்று உதவிபுரிந்தார்.
எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே சென்று, ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களுக்காக தனது பிறந்தநாள் கொண்டாடுவதையே தவிர்த்தார்.
“ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது” என்று ஈழத்தமிழர்களின் வலியை உணர்ந்தவராக உணர்ச்சிப்பூர்வமாகப் பதிலளித்தார். (பின்னாள்களில் அவரின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன).
அதன் சாட்சியாக தனது மூத்த மகனுக்கு `விஜய பிரபாகரன்’ என பெயர்வைத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும், ஈழத்தின் மீதும் தனக்கிருந்த பற்றைப் பறைசாற்றினார்.
மேலும், தனது 100ஆவது படத்துக்கு வைத்த `கேப்டன் பிரபாகரன்’ என்ற பெயர்தான், அவரின் அடைமொழியாக நின்று இன்றுவரை அனைவராலும் அன்போடு `கேப்டன்’ என அழைக்கப்படுகிறார்.