Connect with us

அரசியல்

சிங்கள பௌத்தத்தினது தமிழின விரோத அரசியல் வியூகத்தில் தமிழ் மக்களின் நிலை?\

Published

on

tamilni 460 scaled

சிங்கள பௌத்தத்தினது தமிழின விரோத அரசியல் வியூகத்தில் தமிழ் மக்களின் நிலை?\

கட்டுரை – T.Thibaharan

இலங்கைத் தீவில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாய் தமிழ் மக்களை இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதிலும், இனவழிப்பு செய்வதிலும் சிங்களதேசம் எந்த விட்டுக்கொடுப்போ, தளர்வோ இன்றி தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து செல்கிறது.

காலத்துக்கு காலம் அது தொடர் வளர்ச்சிக்கும் புதிய பரிணாமங்களுக்கும் உட்பட்டே வந்திருக்கிறது. தமிழர்களை இலங்கை அரசியலில் சமபங்காளிகளாக ஏற்றுக் கொள்வதை மறுதலித்து தமிழ் மக்களை இலங்கை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதில் அது ஒன்றரை நூற்றாண்டு காலமாகப் புரட்சிகர வளர்ச்சியடைந்து செல்கிறது.

சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களை இலங்கை தீவின் அரசியலின் சமபங்காளிகள் என்பதை ஏற்றுக் கொள்வதற்கு ஒருபோதும் தயாராக இருந்ததில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கக்கூடாது என்பதில் மிகத் தெளிவாகவே செயல்பட்டார்கள் இனியும் அவ்வாறே செயல்படுவார்கள். எப்போதும் எல்லா விடயங்களிலும் தமிழர்களை வெட்டிவிடுவதில், ஓரங்கட்டுவதில் குறியாகவே இருந்திருக்கிறார்கள்.

இலங்கைத் தீவிற்குள் தமிழர் தரப்பின் அதிகூடிய கல்வி கற்றோர் விகிதம் இருந்ததனாற்தான் கல்வியில் தரப்படுத்தலை கொண்டு வந்தார்கள். அதுமட்டுமல்ல வேலை வாய்ப்புகளில் திணைக்களங்களில் நிறுவனங்களில் அதிக தமிழர்கள் வேலைவாய்ப்பை பெற்று இருக்கலாம்.

ஆனால் அவர்கள் அரசியல் நிர்வாகத்தில் பொறுப்பு வாய்ந்த, முடிவெடுக்கக்கூடிய, அதிகாரம் செலுத்தக்கூடிய பதவிகள் எதனையும் தமிழர்களுக்கு வழங்குவதில்லை. தமிழர்களுக்கு எழுதுவினைஞர்கள், உதவி அதிகாரிகள், இணைப்பதிகாரிகள், பதில் அதிகாரிகள் என்ற பதவிகளே வழங்கப்பட்டன.

அரசியல் நிர்வாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சிங்கள உயர்குழாத்தவர்களிடமே இருந்ததென்பதை சிங்கள அறிஞரான எல்.பிரயதாச “Holocaust 83″ (கோல கோஸ்ட்1983) என்ற நூலில் குறிப்பிட்டதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழ் தலைவர்கள் தமிழர்களுக்கான உரிமை வேண்டி போராடிய போராட்டங்கள் அனைத்தையும் ஒடுக்குவதிலும் அழிப்பதிலும் நூறு வீதம் முனைப்பாக இருந்து அதனை சாதித்தும் காட்டியுள்ளார்கள்.

இவ்வாறு சிங்களத் தரப்பினர் தமிழ் மக்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்கத் தயார் இல்லை, தமிழ் மக்களுடன் அரசியல் உரிமைகளை பகிர்வதற்கோ, சமபங்காளிகளாக ஏற்கத் தயார் இல்லை என்ற நிலையிற்தான் 1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணியினால் “வட்டு கோட்டை தீர்மானம்” நிறைவேற்றப்பட்டது. வட்டுக்கோட்டை தீர்மானம் 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது மக்களின் அங்கீகாரம் கோரி, “தனி அரசுக்கான மக்கள் ஆணையை” வேண்டி தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கான தனி அரசை வேண்டிய தீர்மானத்துக்கு தமிழ் மக்கள் 78 விகிதமான வாக்கினை அளித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை அமோக வெற்றிபெற வைத்தார்கள். எனவே தமிழ் தலைமைகள் பெற்ற மக்கள் ஆணை என்பது தமிழ் மக்களிடம் இருந்த இறைமை அதாவது “மக்கள் இறைமை” தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே தமிழ் மக்கள் அளித்த ஆணையை அதாவது இறமையை பிரயோகிப்பது என்பது தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொறுப்பாகும். எனவே தமிழ் மக்கள் கொடுத்த இறைமையை நிலைநாட்டுவதற்கான வேலைத்திட்டம் எதனையும் தமிழர் விடுதலைக் கூட்டணி செய்யவில்லை என்ற குற்றம் கூட்டணிக்குரியது. தமிழ் மக்கள் அளித்த மக்கள் ஆணையைப் பெற்ற பின்னரும் மாவட்ட அபிவிருத்தி சபைக்கு இறங்கிச்சென்று மக்கள் ஆணையை கைவிட்டமை என்பது அ.அமிர்தலிங்கம் தமிழ் மக்களுக்கு செய்த துரோகம்தான்.

ஆனாலும் சிங்கள தேசத்தை பொறுத்த அளவில் தமிழ் தலைமைகளுக்கு தமிழர்கள் கொடுத்த மக்கள் ஆணை என்கின்ற தமிழ் மக்கள் இறைமை இலங்கை நாடாளுமன்றத்தின் ஊடாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம் எவ்வாறு இல்லாத ஒழித்தார்கள் அல்லது முடக்கினார்கள் என்பதுவே கவனத்திற்குரியது. 6ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து சட்ட ரீதியாக தமிழ் மக்களின் ஆணையை செல்லுபடி அற்றதாக்கினார்கள்.

அதாவது 6ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கைக்குள் பிரிவினைவாதம் கோருவது தண்டனைக்குரிய கூற்றமாகும். அத்தோடு இலங்கையர்கள் அனைவரும் தொழில் சார்ந்து அந்த 6ஆம் திருத்தச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இலங்கை அரச விசுவாச சத்யபிரமாணம் செய்யவேண்டி இருந்தது.

மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் 6ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு கட்டுப்பட்டு இனி தமிழீழம் கேட்க மாட்டோம் என்று சத்திய பிரமாணம் செய்து வாய்பொத்திப் பதவியேற்றதன் மூலம் தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை மீறிவிட்டார்கள். இங்கே தமிழ் தலைமைகள் தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை கைவிட வேண்டும் என்பதற்காகவே 6ஆம் திருத்தச் சட்டத்தை சிங்கள தலைமைகள் கொண்டுவந்தார்கள்.

அதுமட்டுமல்ல அந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலப் பகுதியும் கவனத்திற்குரியது. 1983 யூலை 27ஆம் திகதி இனப்படுகொலைக் கலவரம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. இதனை இனக்கலவரம் என்று சொல்ல முடியாது. இதனை தமிழினப்படுகொலை என்பதே பொருத்தமானது. தமிழ் மக்கள் தென் இலங்கையில் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

கலவரம் என்பது பரஸ்பரம் இரு சாராரும் தாக்கிக் கொள்வது. ஆனால் இங்கே சிங்கள மக்களினால் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் என்பதனால் அதனை இனவழிப்பு என்றுதான் சொல்லவேண்டும்.

இவ்வாறு யூலை 27ஆம் திகதி இனவழிப்பு ஆரம்பிக்கப்பட்டு தென் இலங்கையில் தமிழ் மக்கள் இனவழிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற போது சிங்கள தலைவர்கள் தங்களுக்குள் ஒன்றுகூடி சட்ட ரீதியாக தமிழ் மக்களை அழிப்பதற்கான 6 ஆம் திருத்தச் சட்ட மசோதாவை வேகமாக 12 நாட்களுக்குள் 1983 ஓகஸ்ட் 08இல் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியும் விட்டார்கள் என்பதிலிருந்து சிங்கள தலைவர்கள் எவ்வாறு தமிழ் மக்களை அழிப்பதற்கு வேகமாக செயல்படுவார்கள் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.

இங்கே இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும் 1977 ஆம் ஆண்டு தேர்தலினால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றம் தான் 1982 டிசம்பர் 22இல் நடைபெற்ற மக்கள் தீர்ப்பு (referendum) என்று அழைக்கப்படுகின்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் வெற்றிபெற்று 1989 வரை தொடரப்பட்டது.

ஆகவே தமிழ் மக்கள் அளித்த ஆணையை பெற்றவர்கள் தொடர்ந்து 12 ஆண்டுகள் இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தார்கள் என்பதும் அந்தக் காலப் பகுதியில் சிங்கள அரசு தமிழ் தலைமைகளை சட்டரீதியான முடக்கங்களையும், தடைகளையும், நிராகரிப்புகளையும் ஏற்படுத்தினாலும் இலங்கை அரசியல் யாப்பிற்குள் உள்ள அரசியல் ஓட்டை வழியை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் ஒரு போராட்டத்தை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தன என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அந்த வாய்ப்பு என்னவெனில் “சிங்கள இன ஒடுக்குமுறை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதி நிதிகளின் ஆதரவின்றி நிறைவேற்றப்பட்ட 6 ஆம் திருத்தச் சட்டத்தை தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற நாங்கள் நிராகரிக்கிறோம்“ என்று கூறி தமிழர் விடுதலைக் கூட்டணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் முதலாவது எதிர்ப்பை காட்டி இருக்க முடியும்.

அவ்வாறு ராஜினாமா செய்வதன் மூலம் பட்டியல் முறையின் கீழ் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் பதவி இழப்பு ஏற்படுமே அன்றி தமிழர் விடுதலைக் கூட்டணிக்குரிய நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போகாது.

ஆகவே பதவியில் இருந்தவர்கள் பதவியை ராஜினாமா செய்து தமது எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும். மீண்டும் மூன்று மாத கால இடைவெளிக்குள் புதியவர்களை கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து வெற்றிடத்தை பிரதியீடு செய்ய முடியும்.

அவ்வாறு பிரதியீடு செய்கின்றபோது “நாங்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்குள்ளான போராட்டத்தை தொடர்வதற்கு இந்த முறைமையை ஒரு போராட்ட வடிவமாக ஏற்று போராட்டத்தை நாடாளுமன்றத்துக்குள் தொடர்ந்து நடத்துவதற்காகவே இந்த 6ஆம் திருத்தச் சட்டத்துக்கு இணங்கி சத்தியப் பிரமாணம் செய்கிறோம்“ என்று பிரகடனப் படுத்திய பின் சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்பு செய்வதாக அறிவிக்க வேண்டும்.

உள்ளே சென்றவர்கள் நாடாளுமன்றத்துக்குள் குறுகிய காலம் குழப்பங்களை விளைவித்து நாடாளுமன்றம் ஒழுங்காக செயற்பட விடாது இடையூறுகளை விளைவித்து மீண்டும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பின்னர் மீண்டும் புதியவர்களை அனுப்பி இதை ஒரு தொடர் போராட்டமாக நாடாளுமன்றத்திற்குள்ளே நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பல்வேறுபட்ட தமிழர்களை நாடாளுமன்றத்துக்குள் அனுப்பி இலங்கை நாடாளுமன்றத்தை அல்லோலகல்லோலப்படுத்தி இருக்கவேண்டும்.

இது நடைமுறைக்கு சாத்தியமான ஒரு போராட்ட முறையுமாகும். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயான ஒரு போராட்ட வடிவமாக இதனை கட்டமைப்புச் செய்திருக்க முடியும் . இதனை செயல்படுவதற்கான வழிவகைகள் இலங்கை அரசியல் யாப்பில் தமிழ் மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு இடைவெளி அல்லது ஓட்டை என்றே சொல்ல முடியும்.

இவ்வாறு ராஜினாமா செய்வதும் புதியவர்களை அனுப்புவதுமாக தொடர்ந்து புதியவர்களை அனுப்பி நாடாளுமன்றத்துக்குள் கூச்சலையும் குழப்பங்களையும் இடையூறுகளையும் விளைவித்து இலங்கை நாடாளுமன்றத்தை கேலிக்குள்ளாக்கி சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்க முடியும்.

அத்தோடு சிங்கள ராஜதந்திரிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தை தொடர்ந்து குழப்பத்துக்குள் உள்ளாக்கி தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை நோக்கி சிங்களத் தலைவர்களை நிர்ப்பந்தித்து நெருக்கடிக்குள்ளாக்கி அரசியலை நகர்த்துவதற்கான வாய்ப்பு இருந்தது. அதனை தமிழ்த்தலைமைகள் பயன்படுத்தவில்லை அல்லது இதனை இவ்வாறு பயன்படுத்தலாம் என்கின்ற மனத்திடமும் அது சார்ந்த தந்திரோபாய அரசரவியல் அறிவும் நுணுக்கமும் அன்று தமிழ் தலைவர்களிடம் இருந்திருக்கவில்லை என்று கூறுவதுதான் பொருத்தமானது.

எனவே இன்றைய காலச் சூழலில் எதிர் வருகின்ற ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு விட்டதன் அடிப்படையில் எதிர் வருகின்ற தேர்தலை தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான புத்தி பூர்வமான மூலோபாயம் ஒன்றை வகுக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் கடந்த கால படிப்பினைகளில் இருந்து, கடந்த காலத்தில் விட்ட தவறுகளிலிருந்து விடுபட்டு புதிய போராட்ட வழிமுறைகளுக்கு போவதற்கான காலச் சூழல் கனிந்து வருவதனால் எதிர் வருகின்ற தேர்தலையும் இவ்வாறு அன்றைய கூட்டணி போல ஒரு பொது சின்னத்தின் கீழ் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொண்டு மக்கள் ஆணையைப் பெற்று நாடாளுமன்றத்துக்குள் சென்று அன்று செய்து காட்டமுடியாத அல்லது செய்யத் தவறிய ராஜினாமா செய்தல் செயல் முறையை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயான ஒரு போராட்ட வடிவமாக எடுத்து தமிழ் தலைமைகள் போராடுவதற்கு தயாராக வேண்டும் என வரலாறு கட்டளை இடுகிறது.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 7 Rasi Palan new cmp 7
ஜோதிடம்13 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 09, 2024, குரோதி வருடம் சித்திரை 5, வியாழக் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், கன்னி ராசியில் உள்ள உத்திரம்,...

Rasi Palan new cmp 6 Rasi Palan new cmp 6
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 8, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 5 Rasi Palan new cmp 5
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 7, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 4 Rasi Palan new cmp 4
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 06, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 3 Rasi Palan new cmp 3
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 05, 2024, குரோதி வருடம்...

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...