இலங்கை
நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்
நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஸபக்ச கடந்த 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (06.12) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 4 ஆம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் நீதியமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றிய விடயங்கள் தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் அறிக்கையிட்டிருந்தார்.
அவரது பேச்சில் குறிப்பாக என்னை ஒரு இனவாதியாகவும், எனது தந்தையை ஒரு முற்போக்குவாதியாகவும், இந்த சபையின் முன்னாள் உறுப்பினராக இருந்த எனது பாட்டனாரை ஒரு இனவாதியாகவும் சித்தரித்திருந்தார்.
அதில் என்னுடைய பாட்டனார் கம்பளையில் ஆற்றிய உரையில் சிங்கள மக்களை அவமதித்தும், அவர்களைக் கீழ்த்தரமாகவும் கூறியதாகவும் கூறி அவரை ஒரு இனவாதியாக காட்டிக்கொள்வதற்காக தனது கருத்தை முன்வைத்திருந்தார்.
40 வருட அவருடைய அரசியல் வரலாற்றிலே ஒரே சம்பவத்தை மட்டுமே குறிப்பிட்டு அவரை ஒரு இனவாதியாக காட்ட நீதியமைச்சர் முயன்றிருக்கிறார்.
எந்தளவு தூரத்துக்கு அவர் கூறிய கருத்து உண்மையாக இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. அதேபோன்று சிங்களவர்களுக்கு எதிரான இனவாதத்தை ஒரு பக்கம் காட்டிக்கொண்டு, இந்திய இலங்கை பிரஜா உரிமை சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது.
அதில் 690, 000 மலையக மக்களுடைய பிரஜாவுரிமையைப் பறிப்பதற்கு அமைச்சுப் பதவியைப்பெற்று ஆதரவளிக்கத் தயங்காதவராகவும் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தவராக தான் ஜி.ஜி.பொன்னம்பலம் இருந்தவர் என்றும் அவருடைய பேரானாக அவரைப் போலவே இனவாதத்தை கக்குகின்ற ஒருவராக நான் இருக்கின்றேன் என்றும் நீதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஒரு நீதியமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஸ என்னுடைய பாட்டனார் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற நிலையில் – சட்டத்தை விளங்கிக் கொண்டும் சரியான தகவல்களோடு முன்வைக்க முடியாமல் தத்தளிக்கிறார்.
மலையக மக்களுடைய பிரஜா உரிமையை பறித்த சட்டம் இலங்கை பிரஜா உரிமைச்சட்டம் 1948ம் ஆண்டு 18 ஆம் இலக்க சட்டம். அந்த சட்டம் மலையக மக்களுடைய பிரஜா உரிமையை எப்படி பறித்ததென்றால் -இரண்டு சந்ததிகளுக்கு பின்னுக்கு சென்று அவர்கள் நிரந்தரமாக இந்தத் தீவிலே வாழ்ந்ததாக நிரூபிக்க வேண்டியதொரு நிபந்தனையை இட்டதால் – மலையக மக்களுக்கு அதனை உறுதிப்படுத்த முடியாமல் இருந்த காரணத்தினால் அவர்களது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது.
அந்த இலங்கை பிரஜா உரிமை சட்டம் 1948ஆம் ஆண்டு 18 வது சட்டத்தை தமிழ்க் காங்கிரஸ் முற்றாக எதிர்த்திருந்தது. ஜி.ஜி.பொன்னம்பலமும் அதை எதிர்த்திருந்தார்.
இதை நிரூபிப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய வெள்ளி மலரின் கட்டுரை ஒன்றின் ஊடாக நிரூபிக்க விரும்புகின்றேன்.
அந்தக் கட்டுரையை ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பரம விரோதியாக அன்று அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இந்த சபையில் செயற்பட்டிருந்த திரு.அமிர்தலிங்கம் அவர்களே எழுதியிருந்தார்.
அந்த ஆவணத்தை இங்கே பதிவு செய்வதோடு, அதனை ஆவணப்படுத்துவதற்கும் இந்த சபைக்கு சமர்ப்பிக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.