இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை. வருமானத்தை அதிகரிப்பதற்கு வரிகளை அதிகரிக்க வேண்டும். எனவே குறுகிய காலத்துக்கேனும் வரிசுமைகளை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றையதினம்(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சுதந்திரத்துக்கு பின்னர் உத்தியோகபூர்வமாக இலங்கை வங்குரோத்தடைந்த நாடு என்று அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வரவு மற்றும் செலவுக்கிடையிலான பற்றாக்குறை கடன் மூலமும், தேசிய சொத்துக்களை விற்பதன் ஊடாகவும், பணத்தை அச்சிடுவதன் ஊடாகவும் முகாமை செய்யப்பட்டது.
ஆனால் இம்முறை எமக்கு அந்த மூன்று வழிகளையுமே அணுக முடியாது. எனவே அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை.
வருமானத்தை அதிகரிப்பதற்கு வரிகளை அதிகரிக்க வேண்டு0ம். எனவே குறுகிய காலத்துக்கேனும் வரிசுமைகளை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எவ்வாறிருப்பினும் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவு திட்டம் முற்போக்கானதாகும்.
எனவே அதனை நிறைவேற்றியவுடன் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும். நாணய நிதியத்திடமிருந்து கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதன் ஊடாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே இடைநிறுத்தப்பட்டுள்ள கடன்கள் மீளக் கிடைக்கப்பெறும். அதன் மூலம் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும்.
அபிவிருத்திகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் போது இலங்கை வங்குரோத்து நிலைமையிலிருந்து முழுமையாக மீளும். அதன் பின்னர் ஸ்திரமான பொருளாதாரப்பாதையில் எம்மால் பயணிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.