அரசியல்

சர்வபலம் படைத்த ஜனாதிபதியையே புறமுதுகு காட்டி ஓட வைத்த மக்கள் எழுச்சி!

Published

on

இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வகையில் மக்கள் சக்தி இன்று பேரெழுச்சி கொண்டது. அதுமட்டுமல்ல பொலிஸார், படையினர்கூட மக்கள் சார்பு போக்கையே கடைபிடித்தனர். இதனால் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் அரசின் முயற்சி தோல்வி கண்டது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சர்வக்கட்சி அரசமைக்க பதவி விலகும் அறிவிப்பை பிரதமர் விடுத்திருந்தாலும், ஜனாதிபதியிடமிருந்து இன்னமும் உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால் கட்சி தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும் நிலையிலேயே அவர் உள்ளார். அவ்வாறு நடந்தால் இலங்கை அரசியல் வரலாற்றில் பதவி விலகி செல்லும் முதல் நிறைவேற்று ஜனாதிபதி என்ற அரசியல் துரதிஷ்ட சாதனை அவரை சாரும்.

கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் நேற்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், முதலாவதாக ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள் அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தேசிய கொடிகளை தாங்கியவாறு ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்தையும் கைப்பறினர்.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர். கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொண்டனர். எனினும், போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்று இலக்கை அடைந்தனர்.

இதன்போது சுமார் 42 பேர்வரை காயமடைந்துள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது.

ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றவர்கள், அனைத்து அறைகளுக்குள் சென்றனர். நீச்சல் தடாகத்தில் நீராடி மகிழ்ந்தனர். சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த உணவு பொருட்களை உட்கொண்டனர்.

அத்துடன், பிரதம அமைச்சரின் வாசஸ்தலமான அலரிமாளிகையும் போராட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது மாளிகைகளில் இருக்கவில்லை. அவர்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நாட்டின் நிலைவரம் தொடர்பில் ஆராய்வதற்கும், அடுத்தக்கட்ட நகர்வுகளை முன்னெடுப்பதற்காகவும் சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

சில கட்சி தலைவர்கள் நேரிலும், மேலும் சிலர் காணொளி ஊடாகவும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கட்சி தலைவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கூட்டி, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும்வரை பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் செயற்படுவார்.

ஒரு வார காலத்துக்குள் இடைக்கால சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தலுக்கான கால எல்லையும் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சர்வக்கட்சி இடைக்கால அரசமைய, பிரதமர் பதவியில் இருந்து விலக தான் தயார் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இவ்வாறு தெற்கு அரசியல் களம் பெரும் கொந்தளிப்பாகவே காணப்படுகின்றது. அடுத்து வரும் மணிநேரங்களில் தரமான சிறப்பான அரசியல் சம்பவங்கள் அரங்கேறவுள்ளன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version