அரசியல்

ஆட்சி மாற்றம் விரைவில்! – தெற்கு அரசியலில் நடப்பது என்ன?

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

கட்சியின் இந்த முடிவு ஆளுங்கட்சி, எதிரணிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று தெரிவித்தார்.
2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் அரசுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிட்டது.

நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஜீவன் தொண்டமானும், மருதபாண்டி ராமேஸ்வரனும் சபைக்கு தெரிவாகினர். நாடாளுமன்றத்துக்கு இம்முறை தெரிவாகியுள்ள தமிழ் உறுப்பினர்களில் , . ஒரு லட்சத்துக்கும் மேல் விருப்பு வாக்குகளைப் பெற்ற தமிழ் அரசியல்வாதியாக ஜீவன் தொண்டமான் திகழ்கின்றார்.

இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை ஏப்ரல் 5 ஆம் திகதி இ.தொ.கா. மீளப்பெற்றுக்கொண்டது. நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்பட துணிந்தது.
இதனால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அக்கட்சி ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘நடுநிலை’ என்ற அறிவிப்பு வெளியானதால், கடும் எதிர்ப்புகள் வலுத்தன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மக்கள் பக்கம் நின்று, இந்த முடிவை கட்சி எடுத்துள்ளதுஎன ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

1948 முதல் 1977வரை இலங்கையில் பிரதமர் ஆட்சி முறைமை இருந்தது. 1978 இல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி முறை அமுலானது. அன்று முதல் இன்றுவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிகளை வகித்தவர்களுடன் காங்கிரஸ் இணைந்து செயற்பட்டுள்ளது.

ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி. பி விஜேதுங்க, சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச , கோட்டாபய ராஜபக்ச ஆகிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் தலைமையிலான அரசுகளிலும், அமைச்சரவைகளிலும் இ.தொ.கா. பதவிகளை வகித்துள்ளது. மைத்திரிபால சிறிசேன காலத்தில் முத்து சிவலிங்கத்துக்கு இராஜாங்க அமைச்சு பதவி கையளிக்கப்பட்டது.

1989 பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தின்கீழ் போட்டியிட்டது.
இ.தொ.காவின் வேட்பாளர்களான முத்து சிவலிங்கம், வீ. அண்ணாமலை ஆகியோரும் தோல்வியைத் தழுவினர். எனினும், ஐ.தே.க. ஆட்சியில் இ.தொ.காவுக்கு இரண்டு தேசியப்பட்டியல்கள் வழங்கப்பட்டன. சௌமியமூர்த்தி தொண்டமானும், பிபி தேவராஜும் நாடாளுமன்றம் சென்றனர். அமைச்சரவையிலும் இடம்பிடித்தனர்.

1994 , 2000, 2001, 2004, 2010 , 2015 மற்றும் 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல்களை இ.தொ.கா. பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே எதிர்கொண்டுள்ளது. 1977 இல் மட்டுமே கட்சி சின்னமான சேவலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை அக்கட்சி பெற்றது. (சௌமியமூர்த்தி தொண்டமான் வெற்றிபெற்றார்)

தேர்தல் காலங்களில் ‘அரசியல் கூட்டணி’களுக்காக கட்சி மாறுதல் அல்லது தேர்தலின் பின்னர் அமைச்சு பதவிகளுக்காக ஆளுங் கட்சியில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் தீர்மானங்களை ‘சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப’ காங்கிரஸ் எடுத்துள்ளது. எனினும், அரசொன்றுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை – ‘இக்கட்டான காலகட்டத்தில் ‘ ஆதரிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகவே கருதப்படுகின்றது.

52 நாட்கள் ஆட்சி கவிழ்ப்பு சூழ்சியின்போது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை இ.தொ.கா. எதிர்த்தது. ‘சூழ்ச்சி ஆட்சி’யின் அமைச்சரவையில் அமரர். ஆறுமுகன் தொண்டமான் இடம்பிடித்திருந்தார்.
இ.தொ.கா., தமது அரசுக்கு ஆதரவு வழங்கும் என்றே ஜனாதிபதி நம்பினார். அமைச்சு பதவி வழங்கப்படும் எனக் கூறி பஸிலும் பேச்சுகளில் ஈடுபட்டார். எனினும், மக்கள் பக்கம் நின்று இ.தொ.கா. முடிவெடுத்துள்ளது.

🛑 ‘தற்போதைய சூழ்நிலை’ ஜனாதிபதி, பொதுத்தேர்தலுக்கான காலப்பகுதி அல்லாமல்,

🛑 அதேபோல – பிரதான எதிர்க்கட்சியுடன் மாற்று கட்சி (தமிழ் முற்போக்கு கூட்டணி) பலமான அரசியல் உறவை கொண்டுள்ள நிலையில்,

🛑‘அரசியலுக்கு அப்பால்’ மக்கள் பக்கம் நின்று, பதவிகளையும் மறுத்து, இ.தொ.கா. அரசை எதிர்க்க துணிந்துள்ளமை அக்கட்சியின் அரசியல் வரலாற்றில் ஒரு திரும்புமுனையாக பார்க்கப்படுகின்றது.

🛑 தொழிலாளர் தேசிய சங்கம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வெளியேறி, 1965 இல் தொழிலாளர் தேசிய சங்கத்தை நிறுவினார்n’தொழிற் சங்க துறவி’ அமரர். வி.கே. வெள்ளையன். அவருடன் பலர் இணைந்தனர்.

குறிப்பாக ‘வீடற்றவன் நாவல்’ தந்த சி.வி. வேலுபிள்ளையின் வருகையானது தொழிலாளர் தேசிய சங்கத்தின் வெற்றி பயணத்துக்கு வலுசேர்த்தது. சி.வி. வேலுபிள்ளை 1947 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இலங்கை – இந்திய காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு சபைக்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 65, 70 களில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டாலும் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை.

2010 இல் நடைபெற்ற தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து களமிறங்கிய திகாம்பரம் வெற்றிபெற்றார்.

2015 இல் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் திகாவும், திலகரும் சபைக்கு சென்றனர். 2018 இல் 52 நாட்கள் அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்தனர்.

2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று திகாவும், உதயகுமாரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் சபைக்கு தெரிவாகினர். ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் இடவுள்ளனர்.

🛑 அதேவேளை, தற்போதைய 9 ஆவது நாடாளுமன்றத்தில் 48 தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (தமிழ், முஸ்லிம்) அங்கம் வகிக்கின்றனர்.

ஆளுங்கட்சி, எதிரணி மற்றும் தேசியப் பட்டியல் ஊடாக சபைக்கு தெரிவான மேற்படி 48 எம்.பிக்களில் 36 பேர் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். 12 பேர் எதிர்த்து வாக்களிப்பார்கள். ( எம்.பிக்கள் விவரங்களை ஏப்ரல் 20 ஆம் திகதி எனது பதிவிடப்பட்ட எனது முகநூல் பதிவு ஊடாக முழுமையாக அறியலாம்.)

அதேவேளை, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசமைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், புதிய பிரதமர் பற்றிய விவரம் வெளிவரவில்லை. இடைக்கால அரசிலும் தானே பிரதமர் என மஹிந்த அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக்கட்சி உட்பட நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் பரிந்துரைக்கமைய , புதிய பிரதமரை நியமித்து, இடைக்கால சர்வக்கட்சி அரசமைக்க ஜனாதிபதி முன்வந்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏற்படும்.

பிரதமர் மஹிந்த பதவி விலக மறுத்து, இடைக்கால அரசு அமைக்க முயற்சி எடுக்கப்படும் பட்சத்தில், அதனை ஏற்பதற்கு சுயாதீன அணிகள் உடன்படமாட்டா!

தற்போதைய அரசியல் கள நிலைவரப்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதில் அரசு தோல்வி அடைவதற்கான வாய்ப்பே அதிகம். 120 பேர், புதிய பிரதமர் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
இது தொடர்பான எண் விவரத்தை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று வெளியிட்டார்.

🛑கம்மன்பிலனின் கூற்றின் பிரகாரம், எதிரணிகளின் சார்பில் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீன அணியில் 39 பேர், அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள மூன்று முஸ்லிம் எம்.பிக்கள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், டலஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா , சரித ஹேரத் ஆகியோர், அரசுக்கான எதிரான நகர்வுக்கு ஆதரவளிக்கக்கூடும்.

பிரதம மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவதற்கு 11 கட்சிகளின் கூட்டணி ஒருவாரகாலம் கெடு விதித்துள்ளது. அந்தவகையில் அடுத்துவரும் சில நாட்கள் இலங்கை அரசியலின் தலைவிதியை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews #Artical

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version