அரசியல்

மக்களின் தன்னெழுச்சி போராட்டமும் – ‘அரசியல் – அரச கட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும்

Published

on

srilanka

மக்களின் தன்னெழுச்சி போராட்டமும் – ‘அரசியல் – அரச கட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக காலி முகத்திடலிலும், ஜனாதிபதி செயலக வளாகத்திலும் இடம்பெறும் போராட்டம் இன்று 14 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

மக்கள் தாமாக முன்வந்து இவ்வாறு மேற்கொள்ளும் தன்னெழுச்சி போராட்டங்களுக்கு, நாளுக்கு நாள் பேராதரவுகள் பெருகிவிடுகின்றன. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் நேசக்கரம் நீட்டியுள்ளனர்.
இந்நிலையில் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் வெற்றியை நோக்கி பயணிக்கின்றதா, ‘கோ ஹோம் கோட்டா’ என்பதுதானே பிரதான கோரிக்கை, அதுதான் – ஜனாதிபதி பதவி விலக மறுத்துவிட்டாரே! அப்படியென்றால் போராட்டம் தோல்விதானே என ஒரு சிலர் கருதுகின்றனர்.

ஆளுங்கட்சி வசம் ‘113’ இருக்கின்றது, பிரதமரும் பதவி விலகவில்லை, அப்படியானால் போராட்டம்மூலம் கிடைத்த பெறுபேறுதான் என்னவென்று மேலும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
மேற்படி கேள்விகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான் – அவ்வாறான கேள்விகளை தொடுப்பவர்களின் ஆதங்கமும் நியாயமாகவே இருக்கின்றது.

ஆனால் மக்களின் போராட்டங்கள் அரசியல் மற்றும் அரச கட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ள சாதகமான சில மாற்றங்களையும் நாம் வெற்றியாகவே பார்க்க வேண்டும்.

சில மேற்குலக நாடுகளில், ரயில் விபத்து இடம்பெற்றால்கூட போக்குவரத்து அமைச்சர் பதவி விலகும் கௌரவமான அரசியல் கலாச்சாரம் இருக்கின்றது. மேலும் சில ஜனநாயக நாடுகளில், மக்கள் எதிர்ப்பை வெளியிட்டால், உயர் பதவிகளை வகிப்பவர்கள், கௌரவமாக வெளியேறும் நடைமுறையும் இருக்கின்றது.
ஆனால் எமது நாட்டில் இன்னும் அவ்வாறானதொரு அரசியல் கலாசாரம் உருவாகவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். பதவியில் இருப்பவர்கள், தலையே போனாலும் பரவாயில்லை, அதனை தக்க வைத்துக்கொள்வவே பாடுபடும் நிலைமையே நீடிக்கின்றது.

நிலைமை இவ்வாறு இருக்கையில் சர்வ அதிகாரத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர், அதனை அவ்வளவு எளிதில் விட்டுவிட்டு – விடைபெறுவாரா என்ன? – அப்படியானால் தீர்வுதான் என்ன என்ற வினா எழக்கூடும்.

மக்களின் இந்த போராட்டம், அரசியலமைப்புக்குட்பட்டதோர் தீர்வு பொறிமுறையையே எதிர்பார்க்கின்றது. இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவும் இல்லை. கிளர்ச்சிகளில் ஈடுபடவும் இல்லை. வன்முறையை அரசியலை ஒருபோதும் அவர்கள் ஆதரிக்கவில்லை – ஆசிர்வதிக்கவும் இல்லை. சட்டப்படியான தீர்வு திட்டத்தையே வலியுறுத்துகின்றனர்.
– அப்படியானால் –
✍️ அரசமைப்புக்கு உட்பட்ட தீர்வு பொறிமுறை எனில், ஒன்று, ஜனாதிபதி பதவி விலக வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் குற்றப் பிரேரணைமூலம் அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்.

✍️ முதலாவது தேர்வு இன்னும் கைக்கூடவில்லை. மக்கள் போராட்டம் வலுவடைந்தால், முதல் தேர்வைக்கூட ஜனாதிபதி நாடலாம்.

✍️இரண்டாவது, குற்றப் பிரேரணை. அதற்கான நகர்வு இடம்பெறுகின்றது. ஆனால் அதனை நிறைவேற்றிக்கொள்வதென்பது பெரும் பாடு என்பதே உண்மை. தற்போதைய சூழ்நிலையில் அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு.

✍️எனினும், அரசமைப்பின் ’20’ ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கு ஆளுந்தரப்பே தற்போது முன்வந்துள்ளது. அதற்காக 21 ஆவது திருத்தச்சட்டம் தயார் நிலையில் உள்ளது. இது மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
மறுபுறத்தில் எதிரணிகளின் சார்பிலும் இதுவரை ’21’ தொடர்பில் இரு தனிநபர் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

✍️ஊழல், மோசடிகளுக்கு எதிராகவும், பதுக்கப்பட்டுள்ள பணத்தை கொண்டுவருவதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோஷம் சட்டம் இயற்றும் சபையில் மேலோங்கியுள்ளது. சில அரசியல் வாதிகள் தமது சொத்துகள் தொடர்பில் கணக்காய்வை மேற்கொள்வதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
இதுவும் தன்னெழுச்சி போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

✍️தவறான சில அரசியல் முடிவுகளை எடுத்தவர்கள்கூட, மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் அரசியல் கலாசாரமும் மலர்ந்துள்ளது. இது மக்கள் போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றம் இல்லையா?

✍️கட்சி தாவும் எம்.பிக்களை மக்கள் நிராகரிக்கின்றனர். விலைபோன அவர்களும் மக்கள் முன்வர அஞ்சுகின்றனர். தாம் எடுத்த முடிவு தவறு என தெரிந்தும், அரசியல் பிழைப்புக்காக அதனை செய்துவிட்டு, தலைமறைவு வாழ்வு வாழ்வது, மக்கள் எழுச்சியால் உருவான மாற்றம் இல்லையா?

✍️நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே, இரசாயன உரம் தொடர்பில் தான் எடுத்த முடிவு தவறு என்பதை ஒப்புக்கொள்ளும் நிலை உருவாகவில்லையா?

✍அமைச்சர்கள் கூண்டோடு பதவி துறந்தனர். ஜனாதிபதி, பிரதமரைதவிர ராஜபக்சக்கள் பதவிகளை பெற முன்வரவும் இல்லை. அமைச்சரவை எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

✍️ வாக்குரிமை’ என்பது மிகப்பெரிய ஜனநாயக ஆயுதம் என்பதை இந்த போராட்டம் உணர்த்தவில்லையா? அதனை தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் நிலையை மக்கள் தற்போது உணர ஆரம்பித்துவிட்டனர்.

✍️பல இடங்களில் இருந்து போராட்டங்களுக்கு வருபவர்கள், தேர்தல் தினத்தில் என்ன நடந்தாலும், இனி வாக்களிக்க ஊருக்கு சென்றுவிட வேண்டும் எண்ணத்தை தம்முள் விதைத்துள்ளனர். இதுவும் போராட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என குறிப்பிடலாம்.

✍️இனவாதம், மதவாத, கட்சி, சலுகை அரசியலுக்கு அப்பால் ‘கொள்கை’ அரசியல் என்ற பொதுவான கருத்தாடல் உருவாகியுள்ளது. இதுவும் சாதகமான மாற்றமாகும்.

✍️ஏனையோரின் பிரச்சினைகளை செவிமடுக்கும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் – நிலையும் உருவாகியுள்ளது.

✍️ அரசுக்கு ஆலவட்டம் பிடித்த சில தனியார் ஊடகங்கள்கூட , மக்கள் எழுச்சியால் மக்கள் சார்ந்த செய்திகளை ஒளிபரப்புகின்றன. இதுவும் போராட்டத்தால் ஏற்பட்ட ஓர் மாற்றம் எனலாம். இப்படி பல விடயங்களை பட்டியலிடலாம்.


அடுத்து என்ன?

ஜனாதிபதி பதவி விலகவில்லை, இந்த அரசும் தொடர்கின்றது, போராட்டங்களும் தொடர்கின்றன. அப்படியானால் அடுத்து என்ன நடக்கும்?

தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும். உணவு பஞ்சம் ஏற்படும் அபாயமும் உள்ளது. சர்வதேச நிறுவனங்கள் கைவிரிக்கும். வெளிநாட்டு முதலீடுகள் வராது. நாடு வங்குரோத்து நிலையின் உச்சகட்டத்தை அடையும். வரிசைகள் தொடரும். விலைகள் உயரும். சிலவேளை, மக்களின் போராட்ட வடிவமும் மாறக்கூடும். தனியார் துறைகள் ஸ்தம்பிக்கும். பலர் தொழில் வாய்ப்பை இழக்க நேரிடும்.
எனவே, உடனடி தீர்வு பொறிமுறையை தேட வேண்டும்.

✍️ உங்கள் தொகுதிகளில் உள்ள எம்.பிக்களுடன் பேச்சு நடத்துங்கள். ஜனாதிபதியை விரட்ட உடன்பட வில்லையெனில் இடைக்கால அரசை ஆதரிக்கும் யோசனையை முன்வையுங்கள். அதற்கு உடன்படாவிட்டால் இனி வாக்களிக்கமாட்டோம் என்பதை உறுதியாக அறிவியுங்கள்.

✍️ புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால சர்வக்கட்சி அரசு அமையட்டும். மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறைவேற்று சபை ஒன்று அமையட்டும். அதில் நிபுணர்கள் அங்கம் வகிக்கட்டும். அந்த சபையுடன் பேச்சு நடத்தி – ஆலோசித்து அமைச்சரவை முடிவுகளை எடுக்கும்.

✍️ இந்த இடைக்கால அரசின்கீழ் 20 ஐ நீக்கிவிட்டு, உடன் 19 ஐ கொண்டுவருவதற்கான அரசமைப்பு திருத்தத்தை உடன் மேற்கொள்ளலாம்.

✍️ நாடு ஓரளவு ஸ்தீரமடைந்ததும் தேர்தலுக்கு செல்லாம்.

✍️ தற்போதைய சூழ்நிலையில் அரசியல் ஸ்தீரத்தன்மையொன்று ஏற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பாதிக்கப்படபோவது சாதாரண மக்களே. அரசியல்வாதிகளுக்கு பண பலம் இருக்கலாம். எனவே, நாடு – நாட்டு மக்கள் குறித்து சிந்தித்து போராட்டக்காரர்களுட் சில விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய நேரம் இது.

#SriLanka #Artical

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version