அரசியல்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 19 தமிழ் எம்.பிக்கள் ஆதரவு! 6 பேர் எதிர்ப்பு!! மூவர் ‘மதில்மேல் பூனை’ நிலைப்பாட்டில்!!!

Published

on

✍️ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை (20.04.2022) எட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

✍️ ஏனைய 20 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர் மேற்படி பிரேரணையை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

✍️ஆறு தமிழ் எம்.பிக்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள். மூவரின் நிலைப்பாடு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

✍️ 9 ஆவது நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிரணி மற்றும் தேசியப்பட்டியல் ஊடாக சபைக்கு தெரிவானவர்களென மொத்தம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

✍️2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தில் வடக்கு, கிழக்கில் களமிறங்கி, தேசியப்பட்டியல் ஊடாக 10 ஆசனங்களைக் கைப்பற்றியது.
1.இரா. சம்பந்தன்
2.தர்மலிங்கம் சித்தார்த்தன்
3.செல்வம் அடைக்கலநாதன்
4.எம்.ஏ.சுமந்திரன்
5.எஸ்.சிறிதரன்
6.வினோநோதராதலிங்கம்
7.சார்ள்ஸ் நிர்மலநாதன்
8.கோவிந்தன் கருணாகரம்
9. இரா. சாணக்கியன்
10. தவராசா கலையரசன்
மேற்படி 10 கூட்டமைப்பு உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

✍️ மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து தொலைபேசி சின்னத்தில் நுவரெலியா, கண்டி, பதுளை, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி ம்றறும் கேகாலை மாவட்டங்களில் போட்டியிட்டது. கூட்டணி சார்பில் அறுவர் நாடாளுமன்றம் தெரிவாகினர்.
1.மனோ கணேசன்
2.வீ.இராதாகிருஷ்ணன்
3.பழனி திகாம்பரம்
4.வேலுகுமார்
5.எம். உதயகுமார்
6.அரவிந்தகுமார்

✍️பதுளை மாவட்டத்தில் வெற்றிபெற்ற அரவிந்தகுமார், தற்போது அரசுடன் சங்கமித்து இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ளார். கூட்டணியின் ஏனைய ஐந்து எம்.பிக்களும் பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

✍️அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு தேசியப்பட்டியல் உட்பட இரு ஆசனங்களைப் பெற்றது. இவ்விருவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் இட்டுள்ளனர்.
1.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
2.செல்வராஜா கஜேந்திரன்

✍️விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் ஒரு ஆசனத்தை வென்றது.
அரச பங்காளியாக இருந்தாலும் தேர்தலில் தனித்து வீணை சின்னத்தில் களமிறங்கிய ஈபிடிபிக்கு யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களில் தலா ஒரு அசனம் வீதம் கிடைத்தது.
1.டக்ளஸ் தேவானந்தா
2.குலசிங்கம் திலீபன்

✍️ஈபிடிபி உறுப்பினர்கள் இருவரும் அரசுக்கு சார்பாகவும், நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்துமே வாக்களிப்பார்கள்.

✍️பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசன்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஒரு ஆசனம் கிடைத்தது. சபைக்கு தெரிவான பிள்ளையானும் பிரேரணையை எதிர்த்தே வாக்களிப்பார்.

✍️ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து இருவர் தெரிவாகினர்.
1.ஜீவன் தொண்டமான்
2.மருதபாண்டி ராமேஷ்வரன்

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இ.தொ.காவின் நிலைப்பாடு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அக்கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் நிலவுகின்றன. பெரும்பாலும் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டை அக்கட்சி எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரேரணை வெற்றியளிப்பதற்கான சாத்தியம் தென்பட்டால் ஆதரிக்கக்கூடும்.

✍️ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான எஸ். வியாழேந்திரனும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவே வாக்களிக்கவுள்ளார். மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் சுரேன் ராகவனும் அரசை ஆதரித்தே வாக்களிப்பார்.

✍️ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளார். எனவே , நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பார்.

✍️ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் அங்கஜன் ராமநாதனும் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. சுதந்திரக்கட்சி எடுக்கும் நிலைப்பாட்டிலேயே அவரது முடிவு தங்கியுள்ளது.

✍️ நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஆதரிக்கும் அனைத்து எம்.பிக்களும் கையொப்பம் இடவேண்டும் என கட்டாயம் இல்லை. வாக்கெடுப்பின்போது தமது வாக்கை பயன்படுத்தினால் சரி. ஆனால் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் பிரேரணை கையளிக்கப்பட்டால் அது பலம்மிக்கதாக அமையும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரமும், அதன் பின்னர் குற்றப் பிரேரணையும் ஒப்படைக்கப்படவுள்ளது.

✍️ தற்போதைய சூழ்நிலையில் ஆளுங்கட்சி வசம் 113 -118 இற்கும் இடைப்பட்ட ஆசனங்கள் இருந்தாலும், அதிலும் சிலர் சுயாதீனமாக இயங்கும் முடிவை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, எதிரணிகள் ஒன்றுபட்டு ,ஆளுந்தரப்பில் உள்ள சிலரின் ஆதரவையும் திரட்டினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறும்.

#SriLankaNews #Artical

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version