காணொலிகள்

கதாநாயக பிம்பங்களைத் தகர்த்த நாயகி – லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா (காணொலி)

Published

on

இந்திய சினிமா மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் ஓர் குற்றசாட்டு, கதாநாயகர்களின் புகழுக்கு மகுடம் சூட்டும் வகையிலான காட்சி மற்றும் கதை அமைப்புகள் ஆகும். உலகளாவிய ரீதியில் சினிமாக்களில் ஆண் மைய கதை போக்குகளே ஆதிக்கம் செலுத்துகின்றன என்றபோதும், இந்திய சினிமாவில் குறித்த விடயம் சற்றே மிகைப்படுத்தப்படுகின்றமை வெட்ட வெளிச்சம்.

ஆண் மைய புகழ் அதிகமாக முன்வைக்கப்படுதலோடு சேர்த்து பெண்களை உலகம் தெரியாத பாவைகளாகவும் – பெரும்பாலும் கணவனுக்கு பணிந்து நடக்கவும் வீட்டு விவகாரங்களை கவனித்துக்கொள்ளவும் மட்டுமே இயலுமை உடையவர்களாகவும் காட்சிப்படுத்துவது குறித்த சினிமாக்களின் நீண்டகால போக்காக காணப்பட்டு வருகின்றது.

சினிமாவின் ஆரம்பகாலம் தொட்டு வெளிவந்திருக்கும் திரைப்படங்களில் கதாநாயகிக்கான தேவையற்ற திரைப்படைப்புகளை விரல் விட்டு எண்ணிவிட முடியும் என்ற போதும், மேற்குறித்த சினிமா இலக்கணத்தை தாண்டி வெளிவர பெரும்பாலான கதாநாயகிகள் தயாராக இருக்கவில்லை. அல்லது அவர்களுக்கு அதற்கான சாத்தியப்பாடுகள் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இவ்வாறான கதாநாயக பிம்பத்தை உடைக்க பெண் மைய கதாபாத்திரங்களை தேர்வு செய்து அப் படங்களை வெற்றிப்படமாக மாற்றுவதற்காக, சூப்பர் ஸ்டார் முதல் அறிமுக நாயகன் – இயக்குநர் வரை அனுமதிக்காக காத்துக்கிடக்கும் வகையிலான ஓர் நாயகி தமிழுக்கு கிடைத்திருக்கிறார். அந்த கதாநாயகிக்கு பெயர் நயன்தாரா.

நயன்தாராவின் சினிமா பிரவேசம் ஐயா என்ற தமிழ் திரைப்படத்தில் இருந்து ஆரம்பமாகிறது. சேலை உடுத்தி நிலம் பார்த்து நடக்கும் ஓர் பவ்வியமான, தமிழ் சினிமா இதுவரை கண்டுவந்த வழக்கமான கதாநாயகியாக ஐயா மற்றும் சந்திரமுகி ஆகிய படங்களில் நயன்தாரா தோன்றினாலும், எடுத்த மாத்திரத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற நயன்தாரா தவறவில்லை.

எனினும் அறிமுகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எனக்கான பயணம் எனக்கான பாதை என்பனவற்றை நானே தீர்மானிப்பேன் என்பது போல நயன்தாரா ஏற்கனவே திட்டமிட்டிருந்தாரோ என்னமோ அவரது வளர்ச்சியும் – கதை தேர்வுகளும் அபரிதமாக இருந்தன.

குறிப்பாக வில்லு, பில்லா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நயன்தாரா கவர்ச்சி புயலாக மாறியிருந்தமை குடும்பப் படங்களுக்கு மாத்திரமல்லாமல் வர்த்தக இலக்கை கொண்ட அத்தனை கதைகளுக்கும் பொருத்தமானவராக நயன்தாராவை மாற்றியிருந்தது.

இந்த வளர்ச்சி வேகம் நயன்தாரா மீது பூசப்பட்ட காதல் கதைகளாலும் அது சார்ந்த செய்திகளாலும் சற்றே மட்டுப்படுத்தப்பட்டது என்பதை மறுக்க இயலாது.

சிம்பு, பிரபுதேவா உள்ளிட்டவர்களுடன் நயன்தாரா காதல் வயப்பட்டதாக செய்திகள் வெளிவந்த அதேவேளை – ஓர் நடிகையின் சொந்த வாழ்க்கை தீர்மானங்களை மதிக்காத பல்வேறு புனைவுகளும் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டன.

எந்த புனைவுகள், கட்டுக்கதைகள், அவதூறுகளும் திறமைக்கு முட்டுக்கட்டை போட முடியாது என்பதற்கு மிக சிறந்த நடைமுறை உதாரணமான நயன்தாரா மிக விரைவாக அவற்றை விட்டு மீண்டு தனது பயணத்தை தொடர ஆரம்பித்தார்.

இவ்வாறான தனது பயணத்தில் அறம், டோரா, ஐரா உள்ளிட்ட பெண் மையக் கதைகளை தேர்வு செய்து அவற்றில் கணிசமான படங்களை வெற்றிப் படங்களாக மாற்றியமைத்ததன் மூலம் விமர்சன கற்களை வீசியவர்களாலும் புகழ் பாக்கள் பாடப்படும் தனிப்பெரும் ஆளுமையாக தன்னை மாற்றிக்கொண்டார்.

அத்துடன் இத்தனை விமர்சனங்களை சம்பாதித்த ஓர் பெண்இ தெய்வமாக எப்படி நடிக்க முடியும் என்ற கருத்துக்களை தவிர்த்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக தோன்றி வசூல் ரீதியாக கணிசமான வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

நயன்தாராவின் வெற்றி என்பது கதையினை மையப்படுத்தி திரைப்படங்களை தேர்வு செய்வதும் முன்னணி – பின்னணி என வரிசைப்படுத்தல்களை கண்டுகொள்ளாது கதாநாயகர்களுடன் ஜோடி சேரும் பக்குவமுமே என்றால் மிகையில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடி சேரும் நயன் நகைச்சுவை நடிகர் ஜோகி பாபுவுடன் டூயட் பாட ஒருபோதும் தயங்கியதில்லை. கதாநாயகிகளின் உச்சமாக திகழும் நயன் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் சேர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ஒருபோதும் மறுப்பு சொல்லியதில்லை. இதுவே நயனின் வெற்றி.

இவ்வாறு இங்கு கட்டமைக்கப்பட்ட பல இலக்கணங்களை தவிடுபொடியாக்கி இன்றும் வெற்றிக்கொடி நாட்டி லேடி சூப்பர் ஸ்டாராக நடைபோடும் நயன்தாரா, இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 

 

அவரது திரைப்பயணம் இன்னும் இன்னும் சிறந்து எதிர்கால நாயகிகளுக்கு மேலும் திடமான வழி அமைக்கட்டும்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version