கவிதைகள்

நித்தமும் என் நெஞ்சில் நிலை! – கம்பநேசன்

Published

on

(வெண்பா இலக்கணத்திற்கு அமையாதது)

நெக்குருகி நேர்ந்தும்மை நெடுநாளாய்ப் பணியுமிந்த
மக்கனுக்காய் மனமிரங்கக் கூடாதோ – பக்குவமாய்
அறிவுக்கு அறிவாகி அகத்தினிலே அமர்ந்தென்றும்
நெறி செய்யவேண்டும் நினை!

பழம் பாகு பால் எதையும் படைத்தறியா எனக்கிரங்கி
இளம் யானைக் கன்றனைய முகத்தோனே – வளம் ஈவாய்
செந்தமிழால் உலகாண்டு சேமமுற நீ எனக்கு
அந்தமிலா ஆற்றல் அளி!

வாழப் பொருள் தந்து வளம் செழிக்கத் தமிழ் தந்து
ஏழைச் சிறியேனை ஏற்றம் செய் – வேழமுக
வித்தகனே! உன் பாதம் வேண்டித் தொழுதிட்டேன்
நித்தமும் என்நெஞ்சில் நிலை!

நம்பிக்கும் ஒளவைக்கும் நல்லபெரும் கபிலர்க்கும்
தெம்புதரும் தமிழ்த்தானம் செய்தவனே –கும்பிட்டேன்
நீங்காமல் நீ என்றும் நெஞ்சினிக்கும் தமிழ் தந்து
பாங்காக அருள்செய்யப் பார்!

வேண்டுவோர் உள்ளத்தில் வெளிப்பட்டுத் துணைசெய்யும்
ஆண்டவனே அருள் நிறைந்த ஆனைமுகா! – நீண்டதோர்
தும்பிக்கை உண்டென்னும் துணிவுடனே பணிந்தேத்தி
நம்பிக்கை கொள்கின்றேன் நான்!

இல்லாமை கூடி இருப்பெல்லாம் தொலைந்து போய்ப்
பொல்லாப்பு நேருகிற புவனியிலே – வல்லோனே
பச்சிளம் பிள்ளைக்கே பால்மா இங்கில்லையிவ்
அச்சத்தை அகற்றுவார் ஆர்!

உள்ளாடை கூட இனி உள்ளகடை கிடையாது
சொல்லாடி என்ன பயன் சொல்லிடுவாய் – நில்லாது
பட்டினத்தார் பாதைதான் சரி என்று தேறலாம்
கட்டியதும் பழக்கமில்லைக் காண்!

கோவணம் தான் கதி என்ற கோதாரி நிலைஆச்சு
பூவனத்தில் நீர் இருந்து பூரித்தீர் – தாவுமயில்
ஏறிப் பறந்துபோய் எழில் ஆண்டியாய் நின்றான்
கூறியதாம் கொள்கை குறி!

பள்ளிக்குப் போய் அறியாப் பாலரினம் வீட்டிருந்து
சல்லித் தனமாகத் சரிகிறதே–கொள்ளிவைத்த
ஒண்லைனாம் வகுப்பினிலே உயிர் விட்ட பிஞ்சுகளை
தண்ணளி கொண்டணைக்கவரம் தா!

மரணங்கள் மலிகிறது மன்றாட்டம் தொடர்கிறது
அரனே நீ அமைதியுறல் கூடுமோ – வரம் தந்து
வாழ வழி காட்டு வளம் பெறட்டும் மனிதகுலம்
ஊழகல உடனிருந்து உழை!

இருவேளை உணவுதான் இப்போதைக் காகுமென
அருள் இல்லா அமைச்சரின் அறிவிப்பு-பொருளில்லா
சங்கடத்தில் சாதலே சால்பென்பேன் ஐயகோ !
தங்குமோ எங்கள் சகம்!

சீனாவை நம்பி சிறப்பென்று மாண்டு போய்
தானாய் அழிந்த கதை சாற்றினால் – வீணாக
உள்ளாடையும் இன்றி உருண்டோடவும் முடியா
பொல்லாத நிலையெனக்கேன் போ!

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version