மருத்துவம்
உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை! – எச்சரிக்கையுடன் செயற்படுங்கள்
சிலருக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் அவ்வப்போது வியர்வை உண்டாகும். இது எதனால் உண்டாகிறது. இதனைப் போக்க என்ன வழி எனப் பார்ப்போம்.
நமது தோலில் வியர்வையை வெளியேற்ற வியர்வை சுரப்பிகள் அமைந்து இருக்கும். அக்குள், கால் இடுக்கு உள்ளிட்ட பகுதிகளில் இந்த சுரப்பிகள் அதிகமாக இருக்கும். அதீத வெப்பத்தால் சருமம் பாதிப்படையாமல் இருக்க மூளையின் கட்டளைப்படி தோலில் வியர்வை சுரந்து உடலை குளிர்விக்கும்.
இவ்வாறு உள்ளங்கையில் வியர்வை ஏற்படுவது இயல்பான விஷயம் அல்ல. உடலில் ஏதேனும் நீண்டநாள் பாதிப்பு இருந்தாலே ஒழிய இந்த பிரச்னை ஏற்படாது. எனவே உங்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தால் உடனே தோல் மருத்துவரை அணுகி என்ன பிரச்னை உள்ளது எனக் கண்டறிவது நல்லது.
உடலில் எந்த மாதிரியான பாதிப்பு இருந்தால் உள்ளங்கை வியர்வை ஏற்படும்?
நாள்பட்ட நீரிழிவு சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு உள்ளங்கை, கால் வியர்க்கலாம்.
பெண்கள் சிலருக்கு கர்ப்ப காலத்தில் தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். தைராய்டு பிரச்னை உள்ள பெண்களுக்கு உள்ளங்கை வியர்க்க வாய்ப்புள்ளது.
மாதவிலக்கில் சிக்கல் உள்ள பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பு மாற்றத்தில் மாதவிலக்கு நாட்களில் உள்ளங்கை வியர்க்கலாம்.
சரும ஒவ்வாமை, நரம்பு மண்டல பாதிப்பு, இதயக் கோளாறு என பல வித பிரச்னைகளின் முன் அறிகுறியாக உள்ளங்கை வியர்க்க வாய்ப்புள்ளது.
மேற்கண்ட அறிகுறிகளுடன் உள்ளங்கை வியர்ப்பது மட்டுமின்றி தலைவலி, நெஞ்சுவலி அல்லது தலைசுற்றல் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
சிலருக்கு சிறு வயது முதலே அதீத பதற்றம் ஏற்படும்போது உள்ளங்கை வியர்க்கும். இது உளவியல் ரீதியான பிரச்னை என்பது குறிப்பிடத்தக்கது.
#health
You must be logged in to post a comment Login