உலகம்

மகனின் உயிரைப் பறித்த வாள்… பிரதமருக்கு உருக்கமான கோரிக்கை

Published

on

மகனின் உயிரைப் பறித்த வாள்… பிரதமருக்கு உருக்கமான கோரிக்கை

நிஞ்ஜா வாள் உட்பட ஆபத்தான ஆயுதங்களை இணையத்தில் எளிதாக வாங்கும் நிலையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மகனை இழந்த தாயார் ஒருவர் பிரதமருக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

குறித்த தாயாரின் கோரிக்கை மனுவுக்கு இதுவரை 7,000 பிரித்தானிய மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். கடந்த 2022ல் 16 வயதேயான ரோனன் காண்டா சம வயது இளைஞர்கள் இருவரால் ஆபத்தான நிஞ்ஜா வாளை பயன்படுத்தி தாக்குதலுக்கு இலக்காகி, கொல்லப்பட்டார்.

அந்த நிஞ்ஜா வாள் இணையமூடாக வாங்கப்பட்டது என பின்னர் விசாரணையில் தெரியவந்தது. இளைஞரின் தாக்குதல் சம்பவம் காணொளியாக வெளியாகி மொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், விரிவான விசாரணையில், ரோனனின் கொலைகாரர்கள் இருவரும் தவறான நபரை பழி தீர்த்தது வெளிச்சத்துக்கு வந்தது. அந்த 16 வயது கொலைகாரர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இளைஞர் ஒருவருடன் பகை ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் தாயாரின் அடையாள அட்டையை பயன்படுத்தி இணையமூடாக நிஞ்ஜா வாள் வாங்கியுள்ளார். சம்பவத்தின் போது, இசையை ரசித்தபடி, நடந்து சென்றுகொண்டிருந்த இந்திய வம்சாவளி ரோனனை அந்த இளைஞர் இருவரும் பின்னால் இருந்து தாக்கியுள்ளனர்.

இதில் ரோனனின் இதயத்தை நிஞ்ஜா வாள் பதம் பார்க்க, சம்பவயிடத்திலேயே ரோனன் மரணமடைந்துள்ளார். இந்த வழக்கில் பிரப்ஜீத் வேதேசா மற்றும் சுக்மான் ஷெர்கில் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, விசாரணை முடிவில், கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரோனனின் தாயார் பூஜா தற்போது வாள்வெட்டு குற்றங்களுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மட்டுமின்றி பிரதமர் ரிஷி சுனக்குக்கு இது தொடர்பில் வெளிப்படையான கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.

மேலும், நிஞ்ஜா வாள் உட்பட ஆபத்தான ஆயுதங்களை இணையத்தில் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜூலை 26 முதல் ஆதரவும் திரட்டி வருகிறார்.

தற்போது வரையில் 7,300 பேர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 10,000 பேர்களின் ஆதரவு கிடைத்ததும் பிரதமரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் விற்பனையை இணையத்தில் தடை செய்ய அரசாங்கத்தால் ஆதரவளிக்க முடியாது என்றால், அதன் காரணத்தை தெரிந்துகொள்ள தாம் விரும்புவதாகவும் பூஜா தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version