உலகம்

அதிக கவனம் ஈர்க்கும் மற்றொரு இளவரசி

Published

on

அதிக கவனம் ஈர்க்கும் மற்றொரு இளவரசி

சார்லசுக்கும் டயானாவுக்கும் இடையிலான 15 வருட திருமண வாழ்க்கையின்போது, சார்லசைவிட அதிக கவனம் ஈர்த்தவர் டயானா. தற்போது, அதேபோல மீண்டும் ஒரு இளவரசி கவனம் ஈர்த்துவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய மன்னரின் குடும்பக் கதைகளை மையமாகக்கொண்டு வெளியாகிவரும் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில், அவுஸ்திரேலியாவுக்கு சார்லசும் டயானாவும் அரசு முறைப்பயணமாக சென்றிருந்தபோது, மக்கள் கூட்டம் டயானாவைக் காண முந்தியடிக்க, இது என்னுடைய அரசு முறைப்பயணம், ஆனால், மக்கள் கவனமெல்லாம் டயானா மீதுதான் இருக்கிறது என சார்லஸ் கோபத்துடன் கூறுவதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

அது சற்றே மிகைப்படுத்தப்பட்ட காட்சி என்றாலும், உண்மையிலும் எங்கு சென்றாலும் சார்லசைவிட டயானா அதிக கவனம் ஈர்த்தார்.

இந்த விடயம், சார்லசும் டயானாவும் பிரிந்த பிறகும் தொடர்ந்தது. டயானாவின் அழகு மட்டுமல்ல, அவரது கருணையும், அத்துடன் தொண்டு நிறுவனங்களில் அவர் சேவை செய்த விதமும்கூட மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

முன்பு வேல்ஸ் இளவரசியான டயானா இப்படி சார்லசைவிட அதிக கவனம் ஈர்த்த நிலையில், இப்போதைய வேல்ஸ் இளவரசியான கேட்டும் அதிக கவனம் ஈர்த்து வருவதாகவும், மீண்டும் மன்னர் சார்லஸ் மீதான மக்களுடைய கவனத்தைவிட, இளவரசி கேட்டைப் பார்க்கவேண்டும் என்னும் மக்களுடைய ஆர்வம் அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கும் ராஜ குடும்ப நிபுணரான Daniela Elser, ஆட்சியில் அமர்வதற்காக சார்லஸ் இவ்வளவு காலம் காத்திருந்தும், ஒளிவெள்ளம் தன் மீது பாய்ச்சப்படும் அவருக்கான நேரம் வரவே வராதா என கேள்வி எழுப்புகிறார்.

அவர் சொல்வதை ஆமோதிப்பதுபோல சமீபத்திலும் ஒரு விடயம் நடந்துள்ளது. ஆம், இம்மாதம் 5ஆம் திகதி, ஸ்கொட்லாந்து மக்கள், மன்னரை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, ஊடகங்கள் எல்லாம் மன்னரைவிட இளவரசி கேட் மீதே அதிக கவனம் செலுத்தின. மறுநாள், பிரித்தானியாவின் 9 பெரிய ஊடகங்களில், 8 ஊடகங்களில் முதல் பக்கத்தில் வெளியானது இளவரசி கேட்டின் புகைப்படம்தான். ஒரே ஒரு ஊடகம் மட்டுமே மன்னர் சார்லசுடைய புகைப்படத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது என்கிறார் Daniela Elser.

அதுவும், மன்னருடைய தனிப் புகைப்படம் அல்ல, ராணி கமீலா, இளவரசர் வில்லியம் முதலானவர்களுடன் மன்னரும் நிற்கும் குழு புகைப்படம் அது!

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version