உலகம்
பாம்பு தீவுக்கு விஜயம் செய்த ஜெலென்ஸ்கி
பாம்பு தீவுக்கு விஜயம் செய்த ஜெலென்ஸ்கி
ரஷ்ய படையெடுப்பின் 500-வது நாளில் பாம்பு தீவுக்கு விஜயம் செய்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தங்கள் படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், போரில் வெல்வோம் என சூளுரைத்துள்ளார்.
படையெடுப்பின் முதல் சில நாட்களில் ரஷ்யப் படைகளிடம் உக்ரைன் வீரர்கள் சரணடைய மறுத்த நிலையில் பாம்பு தீவானது உக்ரேனிய படை பலத்தின் அடையாளமாக மாறியது.
இந்த நிலையில், சனிக்கிழமை வெளியான காணொளி காட்சி ஒன்றில், படகு மூலமாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பாம்பு தீவில் கரையிறங்குகிறார். கருப்பு உடை அணிந்திருக்கும் அவர், அதன் மீது குண்டு துளைக்காத ஜாக்கெட் ஒன்றையும் அணிந்திருக்கிறார்.
அத்துடன், பாம்பு தீவை காக்க ரஷ்ய தாக்குதலில் உயிர் விட்ட வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் பல மாதங்களாக உக்ரைனுக்காக போராடிய அனைத்து வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஜெலென்ஸ்கி, இன்று நாம் பாம்பு தீவில் இருக்கிறோம், இது முழு உக்ரைனைப் போல படையெடுப்பாளர்களால் ஒருபோதும் கைப்பற்றப்படாது, ஏனென்றால் நாம் துணிச்சல் மிகுந்த நாடு என்றார்.
இந்த 500 நாட்களும் உக்ரைனுக்காக ரத்தம் சிந்திய அனைத்து வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, பாம்பு தீவு நமது வெற்றியின் சின்னம் என்றார்.
எதிரிகளிடம் இருந்து உக்ரைனை காக்க உயிர் விட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, அவர்களுக்காக நாம் இந்த போரில் வெல்வோம் என்றார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷ்யா, சில நாட்களிலேயே பாம்பு தீவை கைப்பற்றியது. அப்போது உக்ரைன் வீரர்களை சரணடைய வலியுறுத்தி ரஷ்ய வீரர்களின் மிரட்டலுக்கு, உக்ரைன் வீரர்களின் பதில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், 2022 ஜூன் மாதம், ரஷ்ய வீரர்களிடம் இருந்து பாம்பு தீவை அதிரடியாக மீட்டு, மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்தனர் உக்ரைன் வீரர்கள்.
You must be logged in to post a comment Login