உலகம்

ஜன்னல் இல்லாத அறையில் பதுங்கிய வாக்னர் கூலிப்படை தலைவன்

Published

on

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படையின் தலைவன் தற்போது ஜன்னல் இல்லாத அறையில் உயிருக்கு பயந்து பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னை எதிர்ப்பவர்களை எதிரிகள் போல பாவிக்கும் விளாடிமிர் புடினால் தாம் படுகொலை செய்யப்படலாம் என வாக்னர் கூலிப்படை தலைவன் யெவ்கெனி ப்ரிகோஜின் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னரும் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 62 வயதாகும் ப்ரிகோஜின் ஜன்னல் இல்லாத அறைக்குள் தஞ்சமடைந்துள்ளார் என அமெரிக்க உளவுத்துறை நிபுணர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

ரஷ்ய கைப்பாவை நாடான பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் தற்போது ப்ரிகோஜின் தங்கியிருப்பதாக தகவல் வெளியானது. ஆயுத கிளர்ச்சியை கைவிட ப்ரிகோஜின் ஒப்புக்கொண்ட நிலையில், நாட்டைவிட்டு வெளியேற ரஷ்ய அரசாங்கம் அவருக்கு அனுமதி அளித்தது.

மட்டுமின்றி, வாக்னர் கூலிப்படையினர் முன்னெடுத்த கிளர்ச்சியின் போது 15 ரஷ்ய விமானிகளை கொன்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ப்ரிகோஜின் தற்போது துரோகி என விளாடிமிர் புடினால் ஒதுக்கப்பட்டுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய பின்னர், புடினின் செயல்பாடுகளை விமர்சித்தவர்கள் என்பதால் பல முக்கியஸ்தர்கள், ஜன்னலில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த சம்பவங்கள் சமீப மாதங்களாக நிகழ்ந்துள்ளது.

ஆனால், அவை அனைத்தும் விபத்துகள் என்றே ரஷ்ய தரப்பு குறிப்பிட்டு வருகிறது. இந்த நிலையில் தான், அப்படியான ஒரு நெருக்கடியில் சிக்காமல் இருக்க ப்ரிகோஜின் ஜன்னல் இல்லாத அறையில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படை தலைவர்களுக்கு எதிராக கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. துரோகிகள் அழிக்கப்பட வேண்டும் என புடின் ஆதரவு ராணுவ அதிகாரிகள் கொந்தளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த கிளர்ச்சியை தடுத்து நிறுத்த தாமே நடவடிக்கை முன்னெடுத்ததாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, விளாடிமிர் புடினை பகைத்துக் கொள்வதால் ஒரு மூட்டைப் பூச்சி போல நசுக்கப்படுவீர்கள் என ப்ரிகோஜினை எச்சரித்ததாகவும் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version