உலகம்

மனித உரிமை மீறல்கள் குறித்த சாட்சியங்களைத் திரட்டி ஐ.நாவிடம் கையளிக்கும் பொறுப்பு தமிழ்மக்களுக்கு உண்டு-பிரித்தானிய தமிழர்பேரவை வலியுறுத்து!

Published

on

மனித உரிமை மீறல்கள் குறித்த சாட்சியங்களைத் திரட்டி
ஐ.நாவிடம் கையளிக்கும் பொறுப்பு தமிழ்மக்களுக்கு உண்டு
-அரிய வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டும் என்கிறது பிரித்தானியத் தமிழர் பேரவை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது தமிழர்களுக்குக் கிட்டிய அரிய வாய்ப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, எனவே இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து மீறல்கள் தொடர்பான சாட்சியங்களைத் திரட்டி அப்பொறிமுறையிடம் கையளிக்கவேண்டிய பொறுப்பு தமிழ்மக்களுக்கு இருக்கின்றது என்று வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவை மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இனவழிப்பானது தற்போதுவரை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்த இனப்படுகொலைகளின் உச்சகட்டமாகக் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் ஒரு இலட்சத்து நாற்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டபோது உலகநாடுகளும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச கட்டமைப்புக்களும் மௌனமாக வேடிக்கை பார்த்ததை தமிழ்மக்கள் எப்போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களுக்கு தாயகம், தேசியம் மற்றும் தன்னாட்சி என்ற அடிப்படையில் நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதையும், இனப்படுகொலை உள்ளிட்ட கடந்தகால மீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் விசாரணைப்பொறிமுறையின் ஊடாக நீதியை நிலைநாட்டுவதையும் முன்னிறுத்திய பல்வேறு நடவடிக்கைகளை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றோம்.
அதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதியாக நிறைவேற்றப்பட்ட 51ஃ1 தீர்மானத்தின் பிரகாரம் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத்திரட்டி, அவற்றை வழக்குத்தொடர்வதற்கு ஏதுவான கோப்புகளாகத் தயார்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாறு கிடைத்த வாய்ப்பைக் கைவிடாமல், தேவையான அனைத்து சாட்சியங்களையும் சேகரித்து இப்பணிக்குழுவிடம் வழங்குவதை மிகமுக்கிய கடமையாகக் கருதுகின்றோம். அதற்குரிய நடவடிக்கைகளை நாமனைவரும் இணைந்து முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும் என்று பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
#world

1 Comment

  1. Pingback: இலங்கைக்கு அழுத்தம்!! ஐ.நா கோரிக்கை - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version