இலங்கை

அநீதிக்கு எதிராகப் போராடவேண்டியதன் பொறுப்பை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுறுத்துகிறது – அமெரிக்க காங்கிரஸ் தெரிவிப்பு!

Published

on

அநீதிக்கு எதிராகப் போராடவேண்டியதன் பொறுப்பை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுறுத்துகிறது – அமெரிக்க காங்கிரஸ் தெரிவிப்பு!

அநீதிக்கு எதிராகப் போராடவேண்டிய பொறுப்பையும், மக்களனைவரும் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய உலகைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் நினைவூட்டுவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் விலி நிக்கெல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற 26 வருடகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான நேற்று முன்தினம் 18 ஆம் திகதி இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறிப்பாக பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளில் புலம்பெயர் தமிழர்களால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அவற்றில் அந்நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

அதன்படி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலன்று பிரிட்டனின் வெஸ்ட்மினிஸ்டர் மாளிகைக்கு அருகாமையில் ஒன்றுகூடிய அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள், போரில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்ததுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்குத் தமது ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

அதேபோன்று பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனாக்கின் இல்லத்துக்கு முன்பாக ‘பொதுமக்களுக்கு எதிரான போர்’ மற்றும் ‘இலங்கை: மரணங்களை எண்ணும் செயற்திட்டம்’ என்னும் மகுடங்களில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதேவேளை இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பிரிட்டனின் நிழல் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமி, ‘பிரிட்டன் அரசாங்கம் தமிழ்மக்களுக்கு ஆதரவளித்துச் செயற்படுவதுடன், இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என்ற பரிந்துரைகள் குறித்துக் கவனம்செலுத்தவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழினப்படுகொலை நினைவு நாளில் உயிரிழந்தவர்களையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், தமிழர்களின் மீண்டெழும் தன்மையையும் நினைவுகூருவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் விலி நிக்கெல், ‘அநீதிக்கு எதிராகப் போராடுவதற்கான எமது பொறுப்பையும், அனைவரும் அமைதியானதும் சுதந்திரமானதுமான முறையில் வாழக்கூடிய உலகைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் எமக்கு நினைவூட்டட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்திருக்கும் சுவிஸ்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஃபெயின் மொலினா, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

#world

1 Comment

  1. Pingback: முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வு - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version