உலகம்

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைநீக்கம்!

Published

on

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைநீக்கம்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.

விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற தீர்ப்பு தவறானது என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் நோக்கம் என பீட்டா தரப்பு வாதிட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஒத்தி வைத்தது. இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மனிதர்களுக்கு சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை என நீதிபதி ஜோசப் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தபிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version