இலங்கை

இலங்கையைப் பொறுப்புக்கூறச்செய்வதில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் – அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்!

Published

on

இலங்கையைப் பொறுப்புக்கூறச்செய்வதில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் – அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்!

போர்க்குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதிலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை உறுதிசெய்வதிலும் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியமென வலியுறுத்தும் தீர்மானமொன்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான டெபோரா ரோஸ் மற்றும் பில் ஜோன்ஸன் ஆகியோரால் கூட்டாக மீள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து வட, கிழக்கு மாகாணங்களில் பெரும் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி ஏற்கனவே இரு வருடங்களுக்கு முன்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு மேமாதம் 18 ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான டெபோரா ரோஸ் மற்றும் பில் ஜோன்ஸன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அத்தீர்மானம் நேற்று முன்தினம் அவ்விரு உறுப்பினர்களாலும் மீள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானமானது யுத்தத்தில் உயிரிழந்தவர்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன் நீதியையும், பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் அதேவேளை, போர்க்குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையானதும் அமைதியானதுமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கும் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைக் கோருகின்றது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் உறுப்பினர் (அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்) டெபோரா ரோஸ், ‘மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும். இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளைக் கடப்பதற்கும், அனைத்து இலங்கையர்களுக்குமான நிலையான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மற்றும் தற்போது இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவேண்டியது அவசியமாகும். எனவே தமிழ்மக்களின் நீதிக்கான கோரிக்கையை நாம் ஆதரிக்கும் அதேவேளை, பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை மேம்படுத்துமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்துகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை டெபோரா ரோஸினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இணையனுசரணை வழங்கியமை தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்ஸன், ‘என்றேனும் ஒருநாள் சட்டத்தின்கீழ் மக்களனைவரும் சமத்துவமான முறையில் நடாத்தப்படுகின்ற, ஜனநாயகக்கோட்பாடுகளுக்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கின்ற அரசாங்கத்தினால் ஆளப்படுகின்ற ஒருமித்த நாடாக இலங்கை மாறுமென நம்புகின்றேன். அதிகாரப்பரவலாக்கத்தையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்வதற்கு சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளைப் பாராட்டுகின்றேன். அதேவேளை போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கான கடப்பாட்டை ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பூர்த்திசெய்யவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினர்களான விலி நிக்கெல், டொன் டேவிஸ், ஜெஃப் ஜாக்ஸன், சம்மர் லீ, டேனி கே.டேவிஸ் மற்றும் லூஸி மெக்பாத் ஆகியோர் இலங்கை தொடர்பான இத்தீர்மானத்துக்கு இணையனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version