உலகம்

ஈழத்தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதை கனடா ஒருபோதும் நிறுத்ததாது – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

Published

on

மனித உரிமைகள், சமாதானம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை விட்டுக்கொடுத்துவிடமுடியாது என்பதற்கான நினைவூட்டல்களாகப் போரினால் பாதிக்கப்பட்ட கனேடியத் தமிழர்களின் கதைகள் உள்ளன. எனவே போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவரும் இலங்கையர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய செயற்பாடுகளை கனடா ஒருபோதும் நிறுத்ததாது என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தினத்தையொட்டி போரில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அச் செய்தியில் அவர் மேலும் கூறுகையில்,இலங்கையில் 14 வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட ஆயுதப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நாம் இன்று (நேற்று முன்தினம்) நினைவுகூருகின்றோம். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை உள்ளடங்கலாக யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் உயிரிழந்ததுடன் பலர் காணாமல்போயினர்.

மேலும் பலர் அங்கவீனமுற்றதுடன் இடம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன்விளைவாகப் பாதிக்கப்பட்டோர், தப்பிப்பிழைத்தோர், அவர்களின் அன்புக்குரியோர் மற்றும் இவ்வன்முறைகளின் விளைவாக ஏற்பட்ட வலியுடன் வாழ்வோருடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம்.

கனடாவில் பல வருடங்களாக நான் சந்தித்த நபர்கள் உள்ளடங்கலாகப் போரினால் பாதிக்கப்பட்ட கனேடிய தமிழர்களின் கதைகள் மனித உரிமைகள், சமாதானம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை விட்டுக்கொடுத்துவிடமுடியாது என்பதற்கான நினைவூட்டல்களாகத் திகழ்கின்றன.

ஆகையினாலேயே மே 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவு நாளாகப் பிரகடனப்படுத்துவதற்கான தீர்மானம் கடந்த வருடம் கனேடிய பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய செயற்பாடுகளை கனடா ஒருபோதும் நிறுத்ததாது.

நாட்டில் நிலவும் மனித உரிமைகள், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணுமாறு வலியுறுத்தி இலங்கை தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நாமும் இணையனுசரணை வழங்கியிருந்தோம்.

இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்கு அவசியமான மதச்சுதந்திரம், மதநம்பிக்கைகள் மற்றும் பல்வகைமைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நாம் தலைமைதாங்கியிருக்கின்றோம்.

அதேவேளை உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி தொடர்ந்து செயலாற்றுவோம். குறிப்பாக மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையின் அரச அதிகாரிகள் நால்வருக்கு எதிராகக் கடந்த ஜனவரி மாதம் எமது அரசாங்கம் தடைவிதித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் கனேடிய தமிழர்கள் எமது நாட்டுக்காகச் செய்த – செய்துவருகின்ற அனைத்துப் பங்களிப்புக்களையும் அங்கீகரிக்குமாறு கனேடிய அரசாங்கத்தின் சார்பில் அனைத்து கனேடியர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று இலங்கையின் இடம்பெற்ற யுத்தத்தின் தாக்கங்கள் தொடர்பில் அறிந்துகொள்ளுமாறும், அதன்விளைவாகப் பாதிக்கப்பட்டவர்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துமாறும் அனைவரையும் ஊக்குவிக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

#world

Exit mobile version