உலகம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் உயிரிழப்பு!

Published

on

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே , வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மார்பு மற்றும் கழுத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன.

இதேவேளை, துப்பாக்கிக் குண்டு பாய்ந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சம்பவ இடத்தில் மீட்கப்படும்போது அவரது இதய துடிப்பு நின்றுவிட்டது.

அவரால் சுவாசிக்க முடியவில்லை என உள்ளூர் தீயணைப்புத் துறை அதிகாரி மகோடோ மோரிமோட்டோ தெரிவித்திருந்தார்.

ஜப்பானிய நேரப்படி இன்று காலை 11.30 மணியளவில் மேற்கு ஜப்பானில் நரா நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது பின்னால் இருந்து ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து தரையில் விழுந்த ஷின்சோ அபே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

67 வயதான அபேவுக்கு துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து மாரடைப்பும் ஏற்பட்டதாகத் தெரியவருவதாக ஜப்பான் என்.எச்.கே மற்றும் கியோடோ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு ரயில் நிலையத்திற்கு வெளியே அபே உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. தொடர்ந்து அந்தப் பகுதியில் வெண்மையான புகை மூட்டம் காணப்பட்டது என்று என்.எச்.கே. தெரிவித்துள்ளது.

அபேயின் உரையின் போது தொடர்ச்சியாக இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக சம்பவ இடத்தில் இருந்த என்.எச்.கே. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவை காரணம் காட்டி 2020 இல் அபே ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதற்கு முன் அவர் இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தார்.

தற்போதும் ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சி (LDP) கட்சியில் அபே செல்வாக்கு செலுத்தி வருகிறார்.

#World

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version