பிராந்தியம்

யாழில் வாள்களுடன் வழிப்பறிக்கும்பல் – பொலிசார் அசமந்தம்!!

Published

on

யாழில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

பொலிஸாருக்கு தகவல் வழங்கும் போதும் சம்பவ இடங்களுக்கு வருகை தர பொலிஸார் மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மீது கோப்பாய் சமிக்கை விளக்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

கோப்பாய் சமிக்கை விளக்கு பகுதியில் பேருந்து தரித்து நின்றபோது அவ்விடத்துக்கு வந்த இருவர் முதலில் தாக்குதலை மேற்கொண்டனர்.

எனினும் குறித்த பேருந்தின் சாரதி திருப்பித் தாக்கத் தொடங்கிய போது அந்த கும்பலில் வந்தவர்கள் இறங்கி பேருந்தை முந்திச் செல்ல முடியாதவாறு மெதுவாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றனர்.

அதன்பின் குறித்த கும்பல் அலைபேசி அழைப்பை மேற்கொண்டதன் பின்னர் அந்த பகுதிக்கு மேலும் 6 பேர் அடங்கிய கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிள்களில் வந்தது.

வந்த கும்பல் அந்த பேருந்தை தாக்க தொடங்கியபோது கோப்பாய் சமிக்கை விளக்குப் பகுதியில் இருந்த இராணுவத்தினர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அவர்களை தடுக்க முற்பட்டனர்.

கும்பல் இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியது.இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியபோது குறித்த கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது.

எனினும் தப்பிச் சென்ற குழுவில் இருந்த ஒருவர் அப்பகுதியில் இருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

அதுதொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதும் ஒன்றரை மணித்தியாலதுக்கு மேல் சம்பவ இடத்துக்கு கோப்பாய் பொலிஸார் வரவில்லை.

பின்னர் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோதே கோப்பாய் பொலிஸார் அந்த இடத்திற்கு வந்தனர்.

பேருந்து சாரதி ஆசனத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 2லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது என பேருந்து உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த பேருந்து பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமானது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறு வீதிகளில் பயணிப்போர் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும் குழு ஒன்று அவர்கள் கொண்டுவரும் பொருள்களை, பணத்தை கொள்ளை இடுவதாக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த புதன்கிழமை சுன்னாகம் பகுதியில் இருந்து புத்தூர் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார்.

அவர் பயணித்த முச்சக்கர வண்டியை கும்பல் ஒன்று நிறுத்தியது. அவர் முச்சக்கர வண்டியை நிறுத்தாமல் செல்ல முற்பட்ட போது, அந்த கும்பல் அவரை தலைக்கவசத்தினால் தாக்கியதால் அவர் கையில் காயம் அடைந்துள்ளார். என தெரிவித்தனர்.

#SrilankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version