பிராந்தியம்

தரையில் போராடினாலே சட்டம் பாயும் – நாம் கடலில் போராடுவோம்!!

Published

on

வடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்க்ளின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

மீனவர்கள் கடந்த 31ஆம் திகதி முதல் பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்தனர்.


அந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளமை , பொதுமக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு விளைவித்தல் , கொரோனா அபாயம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பருத்தித்துறை பொலிஸார் , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் போராட்டத்திற்கு எதிராக தடையுத்தரவை பெற்று இருந்தனர்.

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து நேற்றைய தினம் இரவு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தினை கைவிட்டனர்.

இந்நிலையில் இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தினை கரிநாளாக அனுஷ்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் 27ஆம் திகதி கடலுக்கு சென்ற வத்திராயன் மீனவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் , இதுவரை காலமும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து மெழுகு திரிகளை ஏந்தி , கறுப்பு கொடிகளுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version