இலங்கை

யாழில் தாக்குதல்: இன்டர்போலின் உதவியை நாடும் பொலிஸார்

Published

on

யாழில் தாக்குதல்: இன்டர்போலின் உதவியை நாடும் பொலிஸார்

கல்வியங்காடு பிரதேசத்தில் அண்மையில் அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடாத்திய 8 பேரை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ள நிலையில் 6 பேர் குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதுடன் ஒருவர் தாக்குதல் சம்பவத்துக்கு மோட்டார் சைக்கிளை வழங்கியதுடன் ஒருவர் தரகராகவும் செயற்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வன்முறை கும்பலிடம் இருந்து பெண்களின் ஆடைகள்,மோட்டார் சைக்கிள்கள்,வாள்கள்,கோடாரி,இரும்பு கம்பி,மடத்தல் போன்றன கைப்பற்றபட்டுள்ளன.

டென்மார்க்கில் வசித்துவரும் விஸ்வநாதன் என்ற நபர் பணம் அனுப்பியே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும் அரச உத்தியோகத்தரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலுக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபா பணம் டென்மார்க்கில் இருந்து விஸ்வநாதன் என்பவரால் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக செங்குந்தா இந்து கல்லூரி விளையாட்டு மைதானம் தொடர்பில் நீடித்த பிரச்சனையே குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை கொலை செய்ய முயற்சித்தமை என்ற குற்றச்சாட்டில் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களின் சூத்திரதாரியாக காணப்படும் பிரதான சந்தேக நபரான டென்மார்க்கில் உள்ள விஸ்வநாதன் என்பவரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்யவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வருகை தந்த 6 பேர் சேதம் விளைவித்திருந்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதுடன், ஜன்னல் கண்ணாடிகளும் CCTV கமராக்களும் சேதமாக்கப்பட்டிருந்ததுடன் குறித்த குழுவில் மூவர் பெண்களின் ஆடைகளை அணிந்து வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version