இலங்கை

குருந்தூர் மலையில் பதற்றம்

Published

on

குருந்தூர் மலையில் பதற்றம்

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர் தரப்பின் பொங்கல் நிகழ்வில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

குருந்தூர்மலையில் ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குருந்தூர் மலையில் இன்று (18.08.2023) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் பொங்கல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை பௌத்த விகாரையில் பௌத்த மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு- குவிவு குமுளமுனை வீதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குருந்தூர் மலை நோக்கி செல்லும் தமிழ் மக்கள் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மேலும் குருந்தூர் மலைக்கு இரவோடு இரவாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் பேருந்துகள், உழவு இயந்திரங்கள் சகிதம் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குருந்தூர் மலையில் அதிகளவான பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் ஒரு அபாயகரமான சூழலிலே பொங்கல் நிகழ்வு எவ்வாறு இடம்பெறவுள்ளது என்ற நிலையில் தற்போது பௌத்த விகாரையிலே வழிபாடுகளில் பௌத்த மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என பொலிஸாரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் இன்றையதினம்(18.08.2023)பொங்கல் வழிபாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு சிங்கள் மக்கள்,பெளத்த பிக்குகள் மற்றும் சில அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இருப்பினும் நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கான ஆயத்தங்கள் செய்யப்படும் நிலையில் நேற்றையதினமே (17) குறித்த பகுதிக்கு சுமார் 30 வரையான சிங்கள மக்கள் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version