இலங்கை

இலங்கையில் நடக்கும் கொடூரங்கள்!

Published

on

இலங்கையில் நடக்கும் கொடூரங்கள்!

இலங்கையில் தற்போது அதிகமாக, தொலைக்காட்சிகளும், வானொலிகளும், செய்தித்தாள்களும், சிறுவர் வன்புணர்வு, பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான செய்திகளையே சுமந்து வருகின்றன.

ஒரு காலத்தில், ஆங்காங்கே ஒன்று என செய்திகளில் இடம்பிடித்த இவ்வகையான செய்தித் தலைப்புகள் சம காலத்தில் மிக அதிகமாக அதுவும் சமூக ஊடக பயன்பாட்டின் பின்னர் மிக அதிகமாகவே வெளிவரத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, பொறுப்பான இடத்தில் இருக்கும் நபர்களால் இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பான செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக அமைகிறது.

மதிப்பிற்கு உரிய இடத்தில் உள்ளவர்களென, மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோரை ஆண்டாண்டு காலம் சுட்டிக்காட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள், பெண்கள் இன்று அவர்களாலேயே வன்கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்பதே வேதனைக்குரிய விடயமாக அமைந்து விடுகின்றது. சுருக்கமாக சொல்வதென்றால் வேலியே பயிரை மேய்ந்த கதை இன்று பகிரங்கமாக அரங்கேறுகிறது என்பது சமூகபொறுப்புள்ள ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுணிய வேண்டிய துரதிஷ்ட நிலையை உணர்த்துகிறது.

தனது சொந்த மகளை இணையத்தின் மூலம் பலருக்கு விற்றத் தாய், தாய் வெளிநாட்டில், 19 வயதுடைய தான் பெற்றெடுத்த மகளை வன்புணர்விற்கு உற்படுத்திய தந்தை, தனது சொந்த பாட்டியை வன்புணர்வு செய்த பேரன், தனது மகனை வன்புணர்வு செய்த தந்தை, தனது மருமகளை வன்கொடுமைக்கு ஆளாக்கிய மாமா, தன்னிடம் கல்வி கற்க வந்த மாணவர்களை காட்டுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து காணொளி பதிவு செய்த ஆசிரியர், அறுவருப்பான முறையில் தனது மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று அதற்கு ஒத்துழைக்காததால் ஒரு யுவதியை கொன்று புதைத்த இளைஞன், தனது காதலியை தனது நண்பர்களுக்கு இறையாக்கிய காதலன் இவைதான் அண்மைய செய்திகள்.

இவை அனைத்தும் வெளிவந்த செய்திகளே தவிர வெளிவராமல் இன்னும் இன்னும் பல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் சமூகத்தில் அரங்கேறியிருக்கக் கூடும்.

இதற்கு முன்னரான காலத்தில் நடைபெற்ற குற்றச் செயல்கள் கூட தற்போதைய இணைய வளர்ச்சியாலும், இயந்திரயமாக்களினாலும் சர்வ சாதாரணமாக அண்மைக்காலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆதி காலத்தில் பெண்களை பொறுத்தமட்டில் சிறு பராயத்திலேயே திருமணம் என்ற ஒரு கட்டுப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டனர், மிக சிறு வயதில் திருணம், வயதாலும், மனதாலும் முதிர்ச்சி பெறாத நிலையில் தனக்கென்று ஒரு குழந்தை என எழுதப்படாத நியதிகளின் கீழ் பெண்களில் வாழ்வியல் அமைந்திருந்தது.

அந்த கலாச்சாரம் படிப்படியாக பல்வேறு வாத விவாதங்களுக்கு மத்தியில் குறைவடைந்து வந்தது மாத்திரம் அல்லாமல், திருமணம், குடும்பம், பிள்ளைகள் என்பதைத் தாண்டி அடுத்த அடியை பெண்கள் எடுத்து வைத்ததும், ஆட்சி முதல் ஆராய்ச்சி வரை கொடி கட்டி பறக்க ஆரம்பித்தனர்.

ஆனால், அந்த வளர்ச்சி போக்கு ஒரு புறம் இருக்க, அவர்கள் மீதான வன்முறை அசுர வளர்ச்சி கண்டது என்பது மறுக்க முடியாத உண்மையே.

இன்று எமது உலக நாடுகள், குறிப்பாக இலங்கை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அவலம் பெண்களுக்கு எதிரான வன்முறை. அதுவும் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

இன்று ஆசிய நாடுகள் எதிர் கொள்ளும் பாரிய பிரச்சினைகளில் ஒன்றாக சிறுவர் வன்கொடுமை காணப்படுகின்றது. இது மேற்குலக நாடுகளை விட ஆசிய நாடுகளிலேயே அதிகம் என்று பல தகவல்கள் கூறுகின்றன.

சிறுவர் வன்புணர்வு அநேகமாக வீடுகளில் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக தம் உறவுகளாலேயே சிறுவர்கள் வன்புணர்வுக்குப் பலியாகி கொண்டிருப்பது மிகவும் வேதனையான விடயம்.

தமது மாமன். மைத்துனன், அண்ணன், தந்தை என்று அவர்கள் அறியாமலும், அறிந்தும் சிறுவர்கள் இந்தப் பாலியல் வன்புணர்வுகளுக்கு பலியாகி கொண்டிருக்கிறார்கள்.

மிரட்டல்கள், பயமுறுத்தல், சின்ன அன்பளிப்புக்கள் மூலம் அவர்களை தம்வசப்படுத்திப் பின்னர் இவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். சில சிறுவர்கள் தமது தந்தை, தாய், சகோதரன், சகோதரி மற்றும் உறவுகளாலேயே பணத்திற்காக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது சமகாலத்தில் அதிகரித்து வருவகின்றமை நாம் அறிந்ததே.

தம்மை அறியாமலே தமது எதிர்காலத்தை இழந்து கொண்டிருக்கும் இந்த சிறுவர்களின் எதிர்காலம் பலத்த கேள்விக்குள்ளாகின்றது. அதனையும் தாண்டி, சில சிறுவர்கள் இவ்வாறான கொடூர நடவடிக்கைகளின் போது கொல்லப்படும் சந்தர்ப்பங்களும் அதிகம் உண்டு.

இப்படியான துரதிஷ்டவசமான சம்பவங்கள் நிகழும் போது அவற்றை எதிர்க்கவும், தண்டிக்கவும் சூழ இருப்பவர்கள் முற்பட்டாலும் இவை ஏன் தடுக்கப்படுவதில்லை என்ற கேள்வி எம் அனைவருக்குள்ளும் இருக்கும்.

பெரும்பாலும், முதற் காரணம் என்றுகூறுட இதனை சொல்லலாம், ஒவ்வொரு பெற்றோரும் தம்மைச் சுற்றியுள்ள உறவுகளை நம்புவதும், அவர்களின் பராமரிப்புகளில் தம் பிள்ளைகளை நம்பி விட்டுச் செல்வதுமே முக்கிய காரணியாகின்றது.

சிறுவர்களது பதின்ம வயதுகளிலேயே அவர்களது உடலில் பருவ மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விடுகிறது. அவர்களின் மனநிலையும் மாற்றம் காண்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான கண்காணிப்பு பெற்றோரின் கையிலேயே தங்கி உள்ளது.

சிறுவர்களை சிறைக் கைதிகள் போலவும், கல்வி கற்கும் இயந்திரங்களாகவும் மட்டும் பார்க்காமல் அவர்களோடு அன்பாகவும், நட்பாகவும் உறவாடுவதும் அவர்களுக்குப் பாலியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கொடுக்கவும் வேண்டியது பெற்றோர்களது முதற் கடமையாக பார்க்கப்படுகின்றது.

ஒரு குழந்தை இவ்வாறான வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக மாறினாலேயன்றி பொது மக்கள் இது குறித்து அறிந்து கொள்வது மிகக் குறைவு. ஊடகங்களில் வெளிவராமல், பொது மக்கள் பார்வைக்கு புலப்படாமல் இன்னும் பல கொடுமைகளும் வண்புனர்வுகளும், துன்புறுத்தல்களும் அன்றாட வாழ்வில் பெண் குழந்தைகள் அதிகமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பெற்றோர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் பெண் குழந்தைகள் தனித்து வீட்டில் தனித்து விடப்பட்டுள்ள சூழ்நிலைகளில் இவ்வாறான ஆபத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றது. வெளிச்சத்திற்கு வராதவை ஏராளம்.

பாடசாலை விடுமுறை நாட்கள், மேலதிக வகுப்புக்கள், உறவினர் வீடு, ஏன் தனது சொந்த வீடுகூட தற்போது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அற்றது என்பதே நிதர்சனமான உண்மை.

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல தனி மனித மாற்றம் இல்லையெனில் இன்னும் பல கொடூரங்களை நாங்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.

விழிப்புணர்வு அற்ற நிலையின் காரணமாகவே பெரும்பாலும் இன்றுவரை இப்படியான நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. நமது சமூக கண்ணோட்டம் பாலியலைத் தவறாக பார்ப்பதாலும் இவ்வாறான தவறுகள் மூடி மறைக்கப் படுகின்றன. இது அவலமாகவும், பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பின்பு இழிச்சொல்லுக்கு ஆளாவதும் கூட இவ்வாறான சிறுவர் பாலியல் வன்கொடுமைகளுக்கு வழிவகுக்கின்றது.

ஆகவே இவ்வாறான பாலியல் வன்முறைகளை முற்று முழுதாக நிறுத்த முடியா விட்டாலும், தவறுகள் நிகழாத வண்ணம் தடுக்கலாம். அல்லது தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பிள்ளைகள் தயக்கமின்றி தங்களது பெற்றோருக்கு அல்லது பொறுப்பானவர்களுக்கு அறிவிக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

இவ்வாறு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகும் சிறுவர்களின் வாழ்க்கை முறை சிறு வயதிலேயே திருத்தியமைக்கப் பட வேண்டிய பொறுப்பு சமூக அக்கறைக் கொண்ட ஒவ்வொருவருடைய தலையாய கடமையாக இருக்கின்றது.

ஏனெனில், இன்றைய சிறுவர்கள் எதிர்நோக்கும் வன்கொடுமைகள் நாளைய அவர்களது எதிரகாலத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்தக் கூடும்.

ஒரு மனிதனுடைய எதிர்காலம் அவனது பழக்கவழக்கங்கள் சிறுபராயம் என்ற ஒன்றில் இருந்து ஆரம்பிக்கின்றது. சிறுவயதில் ஆரோக்கியமாகவும் அன்பான மற்றும் நேர் எண்ணங்கள் கொண்ட ஒரு சூழலில் வாழ்கின்ற போது தான் எதிர்காலமும் வளமானதாக அமையும்.

பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் பூமியில் நல்லவர்களாக தான் பிறக்கின்றார்கள் அவர்கள் வளருகையில் அவன் சார்ந்துள்ள குடும்பம், சமூகம் தான் அவனது வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. சிறுவயது என்பது கள்ளம் கபடமற்றது அந்த பராயத்தில் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

அதனை தவிர்த்து பொறுப்பற்ற சிலரின் செயற்பாடுகளாலும், பொருத்தமற்ற சூழலாலும் நேரும் பல கொடுமைகளால் சிறுவர்களது வாழ்வியல் திசை மாறி போவதை தவிர்க்க வேண்டிய கடமையும் எமது சமூகத்திற்கு உண்டு.

ஒழுக்கம் நிறைந்த ஆக்கபூர்வமான சிறுவர் சமுதாயம் வளமான எதிர்கால தேசங்களை தீர்மானிக்கப் போகின்றன. எனவே தான் உலகின் சிறந்த நாடுகள் அனைத்தும் தமது நாட்டின் சிறுவர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வளவாய்ப்புக்களிலும் அதிகம் கவனம் எடுத்து கொள்கின்றது.

பாதுகாப்பான சூழல், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, தரமான கல்வி, மகிழ்ச்சிகரமான சூழல் என்பவற்றை சிறுவர்களுக்காக உருவாக்குவதில் அந்த நாடுகள் கவனம் செலுத்துகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சிறுவர்களுக்கு வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்பதற்கான உரிமை, கல்விக்கான உரிமை என பொதுவான உரிமைகள் காணப்படுகின்றன.

இவற்றின் அடிப்படையில் சிறுவர்கள் பாதுகாக்கப்படவேண்டும். இவற்றினை பின்பற்றி அரச சட்டங்கள் அமையவேண்டும். சிறுவர் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படவும் வேண்டும்.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், போதைக்கு அடிமையாக்கல், பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றில் ஈடுபடுபவது தண்டனைக்குரிய குற்றமாகும், இருப்பினும் அதிகாரிகளின் கவனயீனம், பொறுப்பற்ற பெற்றோர்கள், பாதுகாப்பற்ற சூழல் போன்றவற்றால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது கவனம் செலுத்தப்பட வேண்டியது என்பதையும் நினைவில் கொள்க.

தங்களுக்கு நேரும் கொடுமைகள் தொடர்பில், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கேனும் இவ்வாறான விடயங்கள் தொடர்பான விழிப்புணர்வும், தெளிவும், எதிர்ப்பதற்கான தைரியமும், பெண் பிள்ளைகளுக்கும், சிறுவர்களுக்கும் குறிப்பாக பெற்றோருக்கும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.

பெரும்பாலும், பாடசாலைகளில் இருக்கும் ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள், அவர்களது பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை தைரியமாக கூறும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவோ, அதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்கள், சட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து பாடசாலை மாணவர்களிடத்தில் ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டியதும் ஆசிரியர்களது கடமையே.

இலங்கையைப் பொறுத்தமட்டில், இவ்வாறான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தங்களது பிரச்சினையை உடன் அறிவிப்பதற்காக துரித தொலைபேசி இலக்கங்களை மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு வழங்கியுள்ளது.

கோவிட் தொற்று தீவிரமடைந்து, கல்வி நடவடிக்கைகள் இணையத்தை நோக்கி நகர ஆரம்பித்த காலத்தில் இருந்து அனைவரது வீட்டிலும் கைத் தொலைபேசி என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் இவ்வாறான குற்றச் சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்து ஆலோசனைப் பெற்றுக் கொள்வது என்பது மிகவும் இலகுவானதாகவே அமைகின்றது.

குறிப்பாக, சிறுவர்களோ, அல்லது பெண்களோ துரித தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்கும் போது எதிர்முனையில் பேசும் அதிகாரிகள் மிக இலகுவாக கலந்துரையாடுவதோடு, பிரச்சினைகளை தெளிவாக கூறவும் வழிவகை செய்கின்றனர்.

அத்தோடு, அந்த பிரச்சினைக்குரிய நடவடிக்கையும் உடனடியாக கவனத்திற் கொண்டு முன்னெடுக்கப்படும் அதேசமயம், குறித்த பிரச்சினைகள் எமக்கு மேலும் தொடர்கின்றனவா, அல்லது நாங்கள் அந்த பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டோமா, அல்லது மேலதிக ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டுமா என்பதையும் அந்த அதிகாரிகள் தொடர்ந்தும் கவனிப்பர்.

எனவே இது தொடர்பான புரிதலும், விழிப்புணர்வும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இருக்க வேண்டியது அவசியம்..

உதவிக்கு…

சிறுவர் வன்முறை சம்பந்தமாக உடனடி உதவிக்காக அழைக்கவும் – 1929

பெண்கள் விவகாரங்கள் சம்பந்தமாக உடனடி உதவிக்காக அழைக்கவும் – 1938

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version