இலங்கை
தமிழர்களுக்கு தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டும் ரணிலின் விலாங்கு தந்திரம்
தமிழர்களுக்கு தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டும் ரணிலின் விலாங்கு தந்திரம்
ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தச் சட்டத்தை சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்திருந்தும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு சென்றிருப்பது தமிழர்களுக்குத் தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டுகின்ற அவரின் விலாங்குத் தந்திரமே என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வது பற்றி ஆலோசனைகளைச் சமர்ப்பித்திருப்பது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்க முடியும்.
ஆனால், மிகவும் நாசூக்காக நாடாளுமன்றத்துக்கு அதனைக் கொண்டு சென்றிருப்பதோடு 13 தொடர்பாக தமிழர் தரப்புக்குச் சாதகம் போலக் காட்டும் சில பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கிறார்.
மாகாணசபைச் சட்டங்களில் உடனடியாகச் சில மாற்றங்களைச் செய்து விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தவுள்ளார் என்ற தோற்றத்தைத் தனது நாடாளுமன்ற உரையின்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
மாகாணசபைச் சட்டம் நடைமுறைக்கு வருவதோ, மாகாணசபைத் தேர்தல் நடைபெறப்போவதோ உடனடிச் சாத்தியம் இல்லாதவை. உள்ளூராட்சித் தேர்தலையே வேட்புமனுத் தாக்கல் செய்த பின்பும் நடத்தவிடாமல், பல தந்திரங்களைச் செய்து தேர்தலைக் காலவரையின்றி ஒத்திப்போட்ட ரணில் விக்ரமசிங்க மாகாணசபைத் தேர்தலை நடாத்துவார் என்று எதிர்பார்ப்பது அரசியல் அறிவிலித்தனம்.
மாகாணசபைச் சட்டங்களில் திருத்தங்கள் செய்து தமிழ்மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்வார் என்று நினைப்பது அதைவிட அறிவிலித்தனமானது.
ரணில் விக்ரமசிங்க மாகாணசபை விவகாரத்தைக் கையிலெடுத்திருப்பதன் முதலாவது நோக்கம் மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு கோரும் இந்தியாவின் அழுத்தங்களில் இருந்து விடுபடுவதாகும்.
இரண்டாவது நோக்கம், ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தி அறுதிப் பெரும்பான்மையுடன் தான் ஜனாதிபதியாக நீடிப்பதை உறுதி செய்வதாகும்.
ரணில் தீர்வு தருவார் என்ற நம்பிக்கையை தமிழ்மக்களிடையே ஏற்படுத்தி அவர்களின் வாக்குகளைக் அபகரிப்பதும், மாகாணசபை விவகாரத்தைப் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு சென்று அதனை நிறைவேற்ற முடியாமல் செய்வதன் மூலம் சிங்கள மக்களினது வாக்குகளை வாரிச் சுரட்டுவதுமே அவரது இலக்குகளாகும்.
தமிழ் மக்கள் ரணில் விக்ரமசிங்கவின் இந்த விலாங்குத்தனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login