அரசியல்

ரணிலின் இராமர்பால அரசியல்!

Published

on

ரணிலின் இராமர்பால அரசியல்!

Courtesy: தி.திபாகரன்

கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதியின் இந்திய பயணத்துடன் மீண்டும் ஒரு பாக்கு நீரினை அரசியற் கரகாட்டம் தொடங்கிவிட்டது. இராமேஸ்வரத்தின் அரிச்சல் முன்னையிலிருந்து தலைமன்னருக்கான தரைவழிப் பாதைக்கான பாலம் ஒன்றை அமைப்பதற்கு இரு தரப்பினரும் முன் வந்து விட்டார்கள் என்ற செய்தி பரவலாக பேசப்படுகிறது. இருதரப்பினரும் முன் வரலாம் அவ்வாறு முன் வந்தது போல சிங்கள ராஜதந்திரிகள் தமது முள்ளுக்கரண்டிப் பாம்பு நாக்கால் இனிப்பாக பேசுவார்கள்.

ஒருபோதும் நடக்க முடியாத ஒன்றைப் பற்றித்தான் இலங்கை அரசு இந்திய தரப்புடன் எப்போதும் பேசும். நடைமுறைப்படுத்த மாட்டோம் என்ற முடிவின் அடிப்படையில் தான் இந்தியாவுடனினான பேச்சு வார்த்தைகளில் இலங்கை விட்டுக் கொடுப்பது போல விட்டுக்கொடுப்புகளை செய்யும். இதுவே சிங்கள அரசியல் ராஜதந்திரம். இந்த அடிப்படையிற்தான் இந்தியாவுக்கும் தலைமன்னருக்குமான பாலமும் பாக்குநீரணையின் ஊடான குழாய் வழி சக்திவள அபிவிருத்தி திட்டமும் பேசப்படுகிறது.

இந்தியாவுக்கான ரணிலின் விஜயம்
இந்தியாவுக்கான ரணிலின் விஜயம் என்பது இலங்கையின் நிகழ்ச்சி நிரலேயன்றி இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் அல்ல என்பதே உண்மையாகும். இந்த நிகழ்ச்சி நிரலிலே என்ன பேச போகின்றது என்பதை தீர்மானித்தவர்களும் சிங்கள ராஜதந்திரிகளே.

எனவே இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் இந்திய பிரதமர் பேசும்போது இலங்கை ஜனாதிபதியின் முகம் கறுத்துவிட்டது என்று சொல்லி புலாங்கிதமடைகின்ற தமிழர்களும், தமிழர் சார்ந்த ஊடகங்களும் இந்த பேச்சுக்களின் சூக்குமங்கள் பற்றி சரிவர புரிந்து கொள்ள வேண்டும்.

சிங்களத் தலைவர்கள் இந்த மேடையில் என்ன என்ன வேஷம் போட வேண்டும், என்ன கூத்தாட வேண்டும் என்பதை அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் மேடைக்கேற்ற கூத்தை அதற்கேற்ற தாளலயத்துடன் ஆடுவார்கள். இங்கே ஆளைப் பார்க்கக் கூடாது சிங்கள ராஜதந்திரிகள் ஆடும் அரசியல் ஆட்டத்தை மாத்திரமே பார்க்க வேண்டும். அதன் விளைவுகளைப் பற்றியே எடை போட வேண்டும்.

இன்றைய காலத்தின் தேவைகளை உணர்ந்து பாக்குநீரிணை அரசியல் முக்கியத்துவத்தையும் ஆழத்தையும் அறிவார்ந்து பார்ப்பது மிக அவசியமானது. பாக்கு நீரிணை என்பது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதி மட்டுமல்ல அது வங்கக்கடலையும் அரேபியக் கடலையும் இணைக்கும் தொடுப்பு பாலமாகவும் விளங்குகிறது.

இத்தகைய பாக்கு நீரினையினால் இலங்கைத் தீவு இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதுதான் இலங்கை தீவின் சிங்கள பௌத்த அரசின் பலமாகவும் அமைந்து காணப்படுகிறது. இலங்கைத் தீவின் பலம் என்பது சிங்கள பௌத்த அரசு கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாக தனித்துவமாக தன்னை பாதுகாப்பதற்கான எல்லை பாதுகாப்பு தடுப்புச் சுவராகவும் பாக்கு நீரிணை விளங்குகின்றது.

பாக்கு நீரிலுள்ள பாதகம்
சிங்கள பௌத்தர்களை பொறுத்தவரையில் இலங்கை தீவாக இருப்பதும், பாக்கு நீரினையால் பிரிக்கப்பட்டு இருப்பதுவும் அதன் பலமாகும். அதே நேரத்தில் இந்தப் பாக்கு நீரிணையினால் அதற்கு பாதகமான அம்சம் ஒன்றும் இருக்கிறது . அது என்னவெனில் பாக்கு நீரிணையின் இருமருந்திலும் அதாவது இந்தியக் கரையில் தமிழகத் தமிழர்களும், மறுபக்கத்தில் இலங்கைத் தீவின் வடமேற்கு வடக்கு கரையோரத்தில் ஈழத் தமிழர்களும் வாழ்வதுதான். இவ்வாறு வாழும் தமிழக மற்றும் ஈழத் தமிழர்கள் கைகோர்த்தால் இந்த கடல் தமிழர்களின் நீச்சல் தடாகம் ஆகிவிடும்.

பத்தாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் பாக்கு நீரிணை தமிழர்களின் நீச்சல் தடாகம் ஆகி சிங்கள பௌத்த அரசுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய வரலாற்றினை சிங்கள பௌத்தர்கள் மிக ஆழமாகவும் வன்மத்துடனும் பார்க்கின்றனர். அந்த அச்சமும், வன்மமும் இன்று முறுக்கு ஏறி போய் சிங்கள பௌத்த தேசியவாதம் இலங்கை தீவில் ராட்சத தேசியவாதமாக வளர்ச்சி அடைந்து விட்டது.

இன்று தமிழர்களின் கண்ணனுக்கு இந்தப் பாக்கு நீரிணையானது வெறும் மீன்பிடிக்கும் கடலாக தோன்றலாம். அவ்வாறுதான் இந்த நிமிடம் வரை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறுதான் இந்தியப் பேரரசை பொறுத்தளவிலும் இது ஒரு சிறிய கடல் பகுதி, எந்த நிமிடமும் இந்த கடலை அனுமான் தாண்டியது போல தாண்டிவிடலாம் என்றுதான் கருதுகிறார்கள். ஆனால் சிங்கள தேசத்தை பொறுத்தளவில் இந்த பாக்குநீரினை என்பது அவர்களுடைய பாதுகாப்பு முன்னரங்கம். இந்திய பெரும் தேசத்தின் ராணுவ, அரசியல், பண்பாட்டு, படை எடுப்புகளை தடுக்கும் தடுப்பரன் அல்லது அகழி என்றே பார்க்கிறார்கள்.

பௌத்த மத பாதுகாப்பு
உண்மையில் சிங்கள தேசத்தில் பௌத்த மதத்தை பாதுகாத்த பாதுகாப்புக் கவசம் இந்தப் பாக்கு நீரிணைதான். பாக்குநீரிணை இல்லையேல் இலங்கை அரசு என்ற ஒன்று இருந்திருக்கவே முடியாது. இலங்கை தீவு இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கும். பாக்குநீரணை இல்லாவிட்டால் பௌத்தம் இலங்கையில் பாதுகாக்கப்பட்டிருக்கமாட்டாது. அது கிபி 10 ம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வந்திருக்கும். ஆகவே பாக்குநீரணை என்பது பௌத்தத்துக்கும் சிங்களவர்களுக்குமான புவியியல் கொடையாகும். எனவே இன்றுள்ள நிலையில் பாக்குநீரிணையின் கட்டுப்பாடு என்பது இரு நாட்டு தமிழர்களின் கைகளில் இருக்கிறது. அதனை மிக அச்சத்துடனே சிங்கள அரசு பார்க்கின்றது.

அதனால்த்தான் பாக்கு நீரிணையில் ஈழத் தமிழர்களின் பிடியை உடைப்பதற்கும், அறுப்பதற்கும் மன்னார் கரையோரமாக முஸ்லிம்களின் படச்சியை ஊக்குவிப்பதோடு பூநகரிக் கரையோரம் முழுவதிலும் சீனாவின் நிறுவனங்களை நிறுவி சிங்கள குடியேற்றங்களை வழஸ்தரிப்பதற்குமான வேலைத்திட்டங்களை மிகவேகமாக செயல்படுத்தி வருகின்றது.

இத்தகைய பாக்குநீரிணையில் தமிழர்களின் பிடியை உடைத்து இல்லாது ஒழிக்கும் வரைக்கும் ரணிலாக இருந்தால் என்ன இனிவரப்போகின்ற எந்த இலங்கை தலைவர்களாக இருந்தாலென்ன அவர்கள் இந்தியாவுடன் தமது பாம்பு நாக்கால் இனிப்பாக பேசுவார்கள்.

இருநாட்டு உறவுகளையும் பலப்படுத்தப் போவதாகவும் இருநாட்டு ஒத்துழைப்பை மேற்கொள்ளப் போகிறோம் என்றும் பலவாறாக பேசுவார்கள். தாம் பலமான பின்னர் தமது வழக்கமான முதுகில் குத்தும் வேலையை இந்தியாவுக்கு சிங்கள தேசம் நிச்சயமாக செய்யும்.

இந்திய இலங்கை பேச்சு வார்த்தை
இவ்வாறு இந்திய பேரரசுடன் இலங்கை ராஜதந்திரம் காலத்துக்கு காலம் தமக்கு நெருக்கடி ஏற்படுகின்ற போதெல்லாம் இனிப்பான செய்திகளுடன் இந்தியாவுக்கு செல்வார்கள். இருதரப்பு பேச்சு வார்த்தைகளும் சுமூகமாக நடப்பதாக தோன்றும். இந்திய அரசியல்வாதிகளும் இவர்களை நம்புவார்கள். அத்தகைய ஒரு இரு தரப்பு பேச்சுத்தான் கடந்த வாரம் இந்தியப் பிரதமர் மோடி-ரணில் சந்திப்பாக நிகழ்ந்தது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் அதுவும் இந்தியாவின் நலன் சார்ந்த விடயங்கள் எதுவும் நடைமுறைக்கு வரப்போவதில்லை. அவ்வாறு நடைமுறைக்கு வரமுடியாதவற்றை ஒப்பந்தங்களாக வரைந்து வெறும் காகிதங்களில் கையெழுத்து இடுவதுடன் அவை முடிந்துவிடும்.

இவ்வாறு காகிதங்களில் கையெழுத்திட்டதை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய நெருக்கடி கொடுக்கின்ற போது இலங்கையின் ராஜதந்திரிகள் மகா சங்கம் என்கின்ற பூதத்தை கிளப்பி விடுவார்கள். அதே சமநேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் ஆளுங்கட்சியின் பிரதிநிதிகளே இதற்கென தேர்வு செய்யப்பட்டு எதிர் பிரச்சாரம் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். ஜே.ஆர் அமைச்சரவையில் சிறில்மத்தியு இருந்தார். அவர் இனவாத நஞ்சைக் கக்க்கவென ஏற்பாடான அமைச்சராவார். அவ்வாறே இன்று சரத் வீரசேகர இருக்கிறார். ஜே.ஆர். இந்திய தரப்புடனும் தமிழர்களுடனும் இணங்கிச் செல்வதான நாடகம் ஒருபுறம் காட்சிப்படுத்தப்படும் போது மறுபுறம் அவற்றிற்கு எதிராகவே அவரது அமைச்சர் சிறில்மத்தியு பேசுவார். கடும் சிங்கள தேசியவாதத்தை தூண்டிவிடுவார். அதனூடாக பௌத்த மகா சங்கங்களும் பிக்குகளும் தெருவுக்கு இறங்குவார்கள். இணக்கப்பாடுகள் குப்பை கூடைக்குள் போய்விடும். இத்தகைய ஒரு நிலைதான் இன்றும் உள்ளது.

இன்று ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் சரத் வீரசேகரா அவ்வாறுதான் ஏற்கனவே இராஜபக்சாக்களால் நியமிக்கப்பட்டார். ரணில் அரசாங்கத்தில் அவர் அத்தகைய நச்சு இவாதத் தொழிலைத் தொடர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதன்படி இப்பொழுதே சரத் வீரசேகரா தனது வேலையை தொடங்கி பாலம் கட்டுவதானது சிங்கள தேசத்தை அழிக்கும் செயலென முழங்கத் தொடங்கிவிட்டார்.

எனவே சிங்கள தேசம் இரட்டை நாக்குடன் எப்போதும் செயல்படும். அது ஒரு நாக்கால் இந்தியாவுடன் நட்புறவு பாராட்டும். மறுபுறத்தில் இந்திய எதிர்ப்பு வாதத்தை பேசும். இதுவே சிங்கள ராஜதந்திரம். இந்த சிங்கள ராஜதந்திரத்தை தமிழ் மக்களும் இந்திய அரசும் புரிந்து கொண்டு செயல்பட்டாலேயயொழிய சிங்கள தேசத்தின் ராஜதந்திரத்தை வெற்றி கொள்ள இயலாது. அப்படி வெற்றிகொள்வது என்பது இலகுவான காரியமன்று.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version