இலங்கை

தமிழீழ கோரிக்கையின் தோற்றம் வளர்ச்சி!

Published

on

தமிழீழ கோரிக்கையின் தோற்றம் வளர்ச்சி!

Courtesy: திபாகரன் தியாகராஜா

ஈழத்தமிழர்கள் நமக்கென விடுதலை பெற்ற ஒரு தனி அரசை அமைக்க வேண்டும் என்று சிந்தித்திருக்காத காலத்தில் டாக்டர்.எஸ். ஏ. விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் மாநாடு “”இலங்கை தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று வரையறுத்து அவர்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு “” என்று 1944 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது.

இதுவே ஈழத்தமிழரின் வரலாற்றில் அவர்களுக்கான பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை பற்றிய முதலாவது திறவுகோலாய் அமைந்தது.

இதன்பின்பு சோல்பரி அரசியல் யாப்பை நிராகரித்து 1947ஆம் ஆண்டு பிரித்தானிய குடியேற்ற நாட்டு அமைச்சருக்கு ஜி.ஜி.பொன்னம்பலம் அனுப்பிய தந்தியில்”” தகுந்த மாற்றுமுறை இல்லாததால் நாங்கள் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கோருகிறோம்”” என்ற வாசகம் காணப்பட்டது. ஆயினும் அதற்கான போராட்டங்கள் பின்பு முன்னெடுக்கப்படவில்லை.

இதற்கு பின்பு 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் பற்றிய நிலைப்பாடு முன்னெடுக்கப்பட்ட போது திருவாளர்கள் எஸ். நடேசன், சி .சுந்தரலிங்கம், ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து “”தமிழுக்கு சம அந்தஸ்து கிடைக்காவிட்டால் தமிழ் நாட்டு பிரிவினைப் போராட்டம் ஆரம்பமாகும்” என்று அறிக்கையிட்டனர்.

இதனை அடுத்து ஆ. தியாகராஜாவை அமைப்பாளராகவும், மேற்படி மூவரையும் இணைத்தலைவர்களாகவும் கொண்ட அகில இலங்கை தமிழர் மகாசபை “” தமிழரின் எதிர்காலம். தமிழ் இராட்சியம் ஒன்றே வழி”” என்ற தலைப்பில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டது. ஆனால் இது பின்பு செயலற்றுப்போனது.

தமிழ் பேசும் மக்களுக்கு தனி இராஜ்யம்
அதேவேளை “” 24 இலட்சம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தனி இராஜ்யம் வேண்டும்”” என்ற தலைப்பில் 1957ஆம் ஆண்டு ஒரு சிறு நூலை ஆ. தியாகராசா வெளியிட்டார்.

இந்நூலின் அட்டைப்படத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் பதுளையை உள்ளடக்கிய தமிழ் இராச்சிய வரைபடம் வரையப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நூல் வழியான கொள்கையும் முன்னெடுக்கப்பட்டது தொடர்ச்சியற்றுப் போனது. “” Eylom : Begining of Freedom Struggle”” என்ற தலைப்பிலான ஓர் ஆங்கில நூலை 1964ஆம் ஆண்டு சி.சுந்தரலிங்கம் எழுதியுள்ளார்.

ஆங்கிலத்தில் இன்றைய உச்சரிப்பான ‘”Eelam ’” என்ற சொல்லுக்குப் பதிலாக அப்போது சுந்தரலிங்கம் ‘Eylom’ என்ற பழைய உச்சரிப்பையே அந்நூலில் பயன்படுத்தியிருந்தார்.

அத்துடன் பொதுவாக இதுவரை (1964) ‘தனிநாடு’ என்று பயன்படுத்தப்பட்டு வந்த பதத்திற்குப் பதிலாக ‘ஈழம்’ என்ற குறிப்பான பதம் இந்நூலில் பயன்படுத்தப்பட்டது.

இதன்பின்பு தமிழரசுக்கட்சியில் இருந்து வெளியேறிய காவலூர் நாடாளுமன்ற உறுப்பினரான வி.நவரத்தினம் 1968 ஆம் ஆண்டு தனிநாட்டு கோரிக்கையை இறுதித்தீர்வாக முன்வைத்தார்.

இதனடிப்படையில் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் 12-11-1968 ஆம் ஆண்டு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய”” தமிழர் சுயாட்சிக்கழகம் “”என்ற பெயரில் பிரிந்து சென்று விடுதலை அடையும் போராட்டத்திற்கான அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதாவது பிரிந்து செல்வதற்கான எண்ணங்கள் அல்லது கோரிக்கைகள் இதற்கு முன் எழுந்திருந்த போதிலும் அதற்கான ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பாக அதற்குரிய கட்டமைப்புடன் தோன்றிய முதலாவது அமைப்பு இதுவேயாகும். அப்போது தமிழீழம் என்ற சொல் பிரயோகிக்கப்படாமல் ‘தமிழர் சுயாட்சி’ என்ற சொற் தொடரின் கீழ் இவ்விடுதலை அமைப்பு தொடங்கப்பட்டது.

ஆனால் இதற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு “ஈழம்” என்ற சொல் மேற்படி சுதந்தரலிங்கத்தின் நூலில் பிரயோகிக்கப்பட்டிருந்தமை கவனத்திற்குரியது.

இவ்வமைப்பு தோன்றும் முன்பே இதே ஆண்டில் ‘விடுதலை’ என்ற பெயரில் நவரத்தினத்தால் ஒரு மாதாந்த அரசியல் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தனிநாடு கோரும் நவரத்தினத்திற்கு மூளைக்கோளாறு
அதாவது விடுதலையின் பேரால் தொடங்கிய முதலாவது பத்திரிகை இதுவேயாகும். பின்நாளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு மூத்த உறுப்பினராக இருந்த பேபி.சுப்ரமணியம் மேற்படி தமிழர் சுயாட்சிக்கழகத்தில் ஒரு முன்னணி உறுப்பினராக இருந்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1970 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத்தேர்தலின் போது புங்குடுதீவில் உள்ள புளியங்கூடல் என்னும் இடத்தில் தமிழரசுக்கட்சி செயலாளர் அ. அமிர்தலிங்கத்திற்கும் தமிழர் சுயாட்சிக்கழகத் தலைவர் வி.நவரத்தினத்துக்கும் இடையே பொது மேடை விவாதம் இடம்பெற்றது.

இந்த விவாதத்தின் போது “தனிநாடு கோரும் நவரத்தினத்திற்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுவிட்டது” என்று தனிநாட்டுக் கோரிக்கையை ஒரு பைத்தியக்காரத்தனமான கோரிக்கையென அமிர்தலிங்கம் வர்ணித்து நவரத்தினத்தையும் அவரது தனிநாட்டுக் கோரிக்கையையும் சாடியுள்ளார்.

ஆனால் 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அமிர்தலிங்கம் தோல்வியடைந்த பின்பு அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சிச் செயலாளர் மு.சிவசிதம்பரமும் அவ்வாண்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார்.

தற்செயலாக அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் பலாலி விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்த போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட உரையாடலானது தமிழரசுக் கட்சியையும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்க்கட்சிகளின் பிரிவு
இரு பெரும் தமிழ்க் கட்சிகளும் பிரிந்து ஒன்றையொன்று எதிர்த்த சூழலில் இரு கட்சிகளின் செயலாளர்களும் ஒரு கட்சியினால் மறுகட்சியென தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

இரு கட்சிகளும் கூட்டுச்சேர்ந்தால் மேற்படி இரு செயலாளர்களினதும் வெற்றி உறுதிப்படுத்தப்பட வாய்ப்புண்டு என்பது வெளிப்படை.. இதனால் இரு செயலாளர்களின் தோல்வியும் கூட்டணி அமைப்பதற்கான துண்டுகோலை மேற்படி இரு தலைவர்களுக்கும் வழங்கியிருக்குமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

தேர்தலில் தோல்வியடைந்த அமிர்தலிங்கம் தான் இழந்த பெருமையை மீண்டும் பெறுவதற்கு ஆக்ரோஷமாக அரசியற் பரப்புரையில் ஈடுபட்டார். இக்காலத்தில் தமிழரின் விடுதலை வீரனாக அவர் தன்னை காட்சிப்படுத்தினார்.

அதேவேளை, இன்னொரு புறம் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் மேற்கொண்ட தீவிர தமிழின ஒடுக்குமுறைக்கு எதிராக இளைஞர்கள் வீறுடன் செயற்படத்தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக உயர் கல்வி தொடர்பாக பல்கலைக்கழக அனுமதியில் மேற்கொள்ளப்பட்ட ‘இனவாரி தரப்படுத்தல்’ தமிழ் இளைஞர்களை பெரிதும் ஆத்திரப்படுத்தியுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பில் இன ஒடுக்குமுறை முற்றிலும் பின்பற்றப்படலாயிற்று. அத்துடன் பொலீஸ் அடக்குமுறைகள், அரசியல் பண்பாட்டு ரீதியில் அரசின் தமிழின விரோத செயற்பாடுகள் என்பன எல்லாம் இணைந்து இளைஞர்களை போராடத்தூண்டியுள்ளன.

தமிழின விரோத அரசியல் யாப்பு
1972ஆம் ஆண்டு தமிழின விரோத அரசியல் யாப்பு பரந்துபட்ட அளவில் தமிழ் மக்கள் மத்தியில் அரச எதிர்ப்பை பூரணமாக ஏற்படுத்தியது. இதனால் தமிழ் இளைஞர்கள் சிங்கள அரசுக்கும் பொலிஸ்க்கு எதிராக முனைப்புடன் செயற்பட தலைப்பட்டனர்.

குறிப்பாக 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு அரசு அனைத்து வகையிலும் தடையாக செயற்பட்டது. இவை எல்லாவற்றையும் மீறி முழு நகரத்தையுமே மக்கள் விழா கோலம் பூரணச்செய்தனர்.

அத்துடன் இல்லங்களில் எல்லாம் வளைவுகள் கட்டப்பட்டு வீட்டுக்குவீடு அலங்கரிக்கப்பட்டு தமிழ் மண்ணே முழு அளவிலான விழாக் கோலம் பூண்டிருந்தது. கம்ப இராமாயணத்தில் இராமரின் முடிசூட்டு விழாவுக்காக அயோத்தி மாநகரம் அலங்கரிக்கபட்டிருந்ததாக கம்பரால் வர்ணிக்கப்பட்டிருந்ததற்கு ஒத்தவகையில் யாழ்ப்பாண நகரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

எந்ததொரு அமைப்புக்களாலும் ஏற்பாடு செய்யப்படாமல் எவ்வித நிதியுதவிகளும் யாராலும் செய்யப்படாமல் மக்கள் தம் இயல்பாக தத்தம் சொந்த பணங்களில் தத்தம் சூழல்களை அலங்கரித்தனர்.

வீட்டுக்கு வீடு ஒவ்வொரு வாசல்களிலும் நிறைகுடங்கள் வைத்தும் வீதியெங்கும் மக்களுக்கு இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டன. தமிழரின் பண்பாட்டு அம்சங்கள் அலங்கரிப்பிலும், உணவு வகைகளிலும், ஆடை அணிதல்களிலும், விருந்தோம்பல்களிலும் வெளிப்பட்டுள்ளன.

ஆயுதப்போராட்ட பின்னணி
இதன் பின்னணியில் ஆயுதப் போராட்ட வடிவிலும், சாத்வீகப் போராட்ட வடிவிலும் தமிழீழக்கோரிக்கை பரிணாமமடைந்தது. இதில் ஆயுதப்போராட்ட வடிவத்தின் எழுச்சியும் வளர்ச்சியும் தனித்து நோக்கப்பட வேண்டியது.

அதேவேளை, இளைஞர் மத்தியில் ஆயுதப்போராட்டத்துடன் கூடிய தமிழீழக்கோரிக்கை முதிர்ந்த பின்னணியில் தமிழர் கூட்டணி 1976 ஆம் ஆண்டு மே மாதம் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வாயிலாக தமிழீழக் கோரிக்கையை சாத்வீக- ஜனநாயக வழியில் முன்வைத்தது. தமிழர் கூட்டணியையும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்தது.

இதனைத்தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலை தமிழீழக் கோரிக்கைக்கான ஆணை பெறும் தேர்தலாக எதிர்கொண்டு அதிற்பெருவெற்றி ஈட்டியது. இதன் வாயிலாக தமிழ் மக்கள் தமிழீழக்கோரிக்கைக்கு தேர்தல் மூலம் ஆணை வழங்கியுள்ளனர்.

இத்தேர்தலில் தமிழீழக்கோரிக்கைக்கு ஆயுதம் ஏந்தத்தொடங்கிய இளைஞர் தரப்பினர் வேறுபாடின்றி ஆதரவளித்தனர். இதற்குள் இருந்து ஆயுதப்போராட்டம் பரிணாமம் பெற்று எழுச்சி பெற்றமை அடுத்த கட்ட வளர்ச்சியாகும்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version