இலங்கை

கோட்டாபய போன்றே செயற்படும் ரணில்

Published

on

கோட்டாபய போன்றே செயற்படும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போன்றே செயற்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

நேற்று (17.07.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, இலங்கையில் கிழக்கு மகாணத்தில் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் இம்மாகாண முஸ்லிம்களை பல்வேறு வகையிலும் புறக்கணித்து வந்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அதிகார சபைகள், ஆணைக்குழுக்கள் என்பவற்றுக்கான தவிசாளர் மற்றும் பொதுமுகாமையாளர்கள் நியமனத்தில் முஸ்லிம்கள் எவரையும் அவர் நியமிக்காமல் புறக்கணித்திருந்தார்.

அதேபோல அமைச்சுக்களின் செயலாளர்களிலும் முஸ்லிம்களை அவர் நியமிக்கவில்லை.

இது குறித்து நான் நாடாளுமன்றத்திலும் கூறியிருந்தேன். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்திலும் கிழக்கு மாகாணத்தில் அதே முஸ்லிம் புறக்கணிப்பு தொடர்ந்து வருகின்றது.

தற்போதும் கிழக்கு மாகாண அதிகார சபைகள், ஆணைக்குழுக்கள் என்பவற்றுக்கான தவிசாளர் மற்றும் பொதுமுகாமையாளர்கள் நியமனத்தில் முஸ்லிம்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை.

அமைச்சுக்களின் செயலாளர் நியமனத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களின் சிரேஷ்ட தரம் கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, கோட்டாபயவின் அதே வழியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியிலும் அதே முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வருகின்றது.

எனினும், முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது விடயத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

நிலைமை இப்படியே நீடிக்குமாக இருந்தால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்காலத்தில் இன்னும் பல வழிகளிலும் புறக்கணிக்கப்படுவார்கள் என்பது உறுதி.

எனவே, சகல முஸ்லிம்களும் இது தொடர்பில் கவனத்தில் கொண்டு எல்லா வழிகளிலும் ஜனாதிபதிக்கு எமது அதிருப்தியைத் தெரிவிக்க முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version