இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறை சந்தித்துள்ள பேரழிவு! அம்பலத்திற்கு வந்த தகவல்

Published

on

இலங்கையின் சுகாதாரத் துறை சந்தித்துள்ள பேரழிவு! அம்பலத்திற்கு வந்த தகவல்

பொறுப்பற்றவர்கள் பொறுப்புகளில் அமர்வதற்கு நாட்டு மக்கள் எதிர்காலத்தில் அனுமதி வழங்க மாட்டார்கள் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பயன்பாடுகள் தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக அரச வைத்தியசாலைகளுக்கு நம்பிச் செல்ல முடியாத பயங்கரமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர மருந்து கொள்வனவு எனும் போர்வையில் தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ததன் காரணமாக சுகாதாரத்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்ட ஈடு பெற்றுத் தருவதாக அமைச்சர் கூறுகிறார். சிலர் இது சிறந்த தீர்மானம் என கருதலாம். இருப்பினும், நட்ட ஈடு அமைச்சரின் தனிப்பட்ட பணத்திலிருந்தே வழங்கப்பட வேண்டும். அதனை விடுத்து, அரச திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படும் என கூறுபவர், தான் செய்த தவறையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமல்லவா? தவறு என்ன? தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை மற்றும் குறித்த தரப்பினருக்கு அனுமதி வழங்கியமையாகும்.

தரமற்ற மருந்துகள் மூலம் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு நிச்சயம் இழப்பீடு பெற்றுக்கொடுக்க வேண்டும். அந்த இழப்பீடு மருந்து இறக்குமதிக்காக அமைச்சர் அரச அதிகாரிகள் மற்றும் அவரை சார்ந்த தரப்பினர் பெற்றுக்கொண்ட இலஞ்ச பணத்திலிருந்தும், தமது வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்துள்ள பணத்திலிருந்தும் வழங்கப்பட வேண்டும்.

பொறுப்பில் உள்ளவர்கள் தமது தனிப்பட்ட சொத்துகளிலிருந்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படவில்லை எனின் எதிர்காலத்தில் தமது உயிர், உடமைகளை இழந்து இழப்பீடு வழங்கும் நிலைமை நிச்சயம் ஏற்படும். மேலும், பொறுப்பற்றவர்கள் பொறுப்புகளில் அமர்வதற்கு நாட்டு மக்கள் எதிர்காலத்தில் அனுமதி வழங்க மாட்டார்கள் என குறிப்பிட்டார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version