இலங்கை

ஈழத்தில் எதுவும் முடியவில்லை! தென்னிந்திய அரசியல்வாதியின் தகவல்

Published

on

ஈழத்தில் எதுவும் முடியவில்லை! தென்னிந்திய அரசியல்வாதியின் தகவல்

ஈழத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என்று எதிரிகள் கருதுகிறார்கள். ஆனால் எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில்“ஈழத்தில் எங்கெங்கும் மனித புதைக்குழி, இனியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? தமிழீழத்தில் 2008-2009 ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்தது.

குறிப்பாக, இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாக பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்து செத்துப் போனார்கள்.

உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின.

உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், உலக அளவில் ஏற்புடைய புகழ்பெற்ற நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்த ஐ.நா முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், ஐ.நாவும் முன்வரவில்லை. வழக்கம் போல் இந்திய ஒன்றியும் கவலைக்கொள்ளவில்லை.

ஏனென்றால், செத்தவர்கள் தமிழர்கள், காணாமல் போனவர்கள் தமிழர்கள். இந்நிலையில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29 ஆம் திகதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக குழியொன்று தோண்டப்பட்ட போது, கொத்து கொத்தாக பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’ தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதி என்பது, 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை.

இறுதி போரின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமயத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுக்களை இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.

இச்சூழலில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இரத்த வெறி அம்பலப்பட்டுள்ளது.

எனவே, இனியாவது தாமதிக்காமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நாவும், உலக நாடுகளும் முன் வர வேண்டும்.

உலக நாடுகளை திரட்ட ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இது ஒருபுறம் இருக்க, அறிவாற்றல், போராற்றல் அர்ப்பணிப்பு, விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாகத் திகழும், உலகத் தமிழர்கள், ஈழம் தனி நாடாவதற்கான புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்க வேண்டிய நேரமிது.

ஆயுதக் குழுப்போராட்டம் என்பது மக்களை ஈர்க்காது. ஈழம் தனி நாடாவதற்கான கோரிக்கையை எழுப்பும், இலட்சிய இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.

எல்லாமே முடிந்துவிட்டது என்று நம் எதிரிகள் கருதுகிறார்கள். எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என்று அவர்களுக்கு நாம் பறைசாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறேன்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version