இலங்கை

முல்லைத்தீவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வனவள திணைக்கள அதிகாரிகள்!

Published

on

முல்லைத்தீவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வனவள திணைக்கள அதிகாரிகள்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள் முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு குறித்த பகுதியில் 45 குடும்பங்கள் குடியேறி இருந்தனர்.

இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபோது குறித்த பகுதியை விட்டு மக்கள் சென்ற பின்னர் குறித்த பகுதியில் இருந்த குடும்பங்கள் மீள்குடியேற்றம் வரவில்லை பலர் உயிரிழந்தும் வேறு சிலர் வேறு இடங்களில் குடியோறிவிட்டனர்.

இவ்வாறான நிலையில் குறித்த கிராம மக்கள் 2012 ம் ஆண்டு கைவேலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது குறித்த பகுதியை வனவள திணைக்களம் எல்லைக் கற்கள் இட்டு வனப்பகுதியாக்கிவிட்டனர்.

இவ்வாறான பின்னணியில் மக்கள் வாழ்ந்த வீடுகள் கட்டு கிணறுகள் கட்டடங்கள் பயன்தரு மரங்கள் உள்ள குறித்த கைவேலி பகுதியில் காணிகள் வீடுகள் அற்ற சுமார் 20 குடும்பங்கள் பலகாலமாக குடியேறி வாழ முயற்சித்து வந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது குடும்பங்களை கொண்டு நடத்த முடியாத நிலையில் வாடகை வீடுகளில் இருக்க முடியாத நிலையில் குறித்த 45 வீட்டுத்திட்டம் பகுதியில் சென்று கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில் 12-07-2023 மதியம் குறித்த பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள் அங்கு மக்கள் போட்ட கொட்டில்களை அகற்றி கொழுத்துவதற்காக மண்ணெண்ணையுடன் வருகைதந்ததாகவும் பெண்கள் தனிமையில் இருந்த கொட்டில்களில் சென்று முன்னாள் போராளியான பெண் ஒருவர் மீதும் ஆண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த இருவரும் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வனவள திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்ற மண்ணெண்ணையை பறித்து அங்கு இருந்த நபரொருவர் தன்மீது ஊற்றி தீக்குளிக்க முற்ப்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் சென்று புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் அவர்களுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடி குறித்த மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்,

அத்தோடு குறித்த பகுதி கிராம அலுவலர் அவர்களும் குறித்த பகுதிக்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினார்.

இங்கு கருத்து தெரிவித்த மக்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் வசதி படைத்தவர்கள் பாரிய காடுகளை வெட்டி காணி பிடிக்கிறார்கள் காசை வாங்கி கொண்டு அவர்களை அங்கு விடுகிறார்கள்.

அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை எனவும் அப்பாவிகளான எங்களை மக்கள் வாழ்ந்த காணிகளில் வாழ அனுமதிக்கிறார்கள் இல்லை எனவும் தம்மால் வாடகை வீடுகளில் வாழ முடியாது எனவும் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் நேற்று முன்தினம் (10-07-2023) 9 பேர் வனவள திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து பிணையில் விடப்பட்டுள்ளனர்.

இதே வேளை இன்று ஒருவர் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இவரை நீதிமன்றில் நாளை முற்ப்படுத்தவுள்ளதாக வனவள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை தமது கடமைகளுக்கு இடையூறு என தெரிவித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு பதிவுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version