இலங்கை

யாழ். பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவி: முன்னிலையில் இவர் தானாம்

Published

on

யாழ். பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவி: முன்னிலையில் இவர் தானாம்

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில் திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா (தற்போதைய துணைவேந்தர்), சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்று நிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இன்று (12.07.2023) காலை கூடியுள்ளது.

இதன்போது, துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபயும் சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் பி.வினோபாபா ஆகியோர் பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் தமது அறிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
சுற்றறிக்கையில் வரையறுக்கப்பட்ட புள்ளித் திட்டத்துக்கமைய ஒவ்வொரு பேரவை உறுப்பினர்களும் தனித் தனியாகப் புள்ளிகளை வழங்கியுள்ளனர்.

புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் முறையே பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி.வேல்நம்பி, பேராசிரியர் செ.கண்ணதாசன் ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில், பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் ஊடாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின்படி பல்கலைக்கழகப் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி அறிவிப்பார்.

தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதால், மிக விரைவில் புதிய துணைவேந்தர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version