இலங்கை

குடும்பஸ்தருக்கு மரணதண்டனை! இளஞ்செழியன் தீர்ப்பு

Published

on

குடும்பஸ்தருக்கு மரணதண்டனை! இளஞ்செழியன் தீர்ப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு 6 வருடங்களின் பின்னர் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்றைய தினம் (12.07.2023) வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் பொலிஸார், அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்துகளை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது பேருந்து ஒன்றில் பயணித்த குடும்பஸ்தர் தன்வசம் உடமையில் வைத்திருந்த பை ஒன்றில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஹெரோயின் போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தரும் கைது செய்யப்பட்டார்.

மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ஒரு கிலோ 135 கிராம் நிறை உடையது என்றும் கலப்படம் அற்ற தூய ஹெரோயின் என்பதும் பொலிஸ் விசாரணை மற்றும் சோதனைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டு, வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கமறியில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காகக் கொண்டு சென்றமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, அரச சட்டத்தரணிகளான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

குறித்த வழக்கு விசாரணைகளில் குறித்த நபர் ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்துச் சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டமையால் குறித்த நபருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

யாழ். நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version