இலங்கை

தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றிய இலங்கை அரசு!

Published

on

தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றிய இலங்கை அரசு!

பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கிய தீர்மானங்களை இலங்கை நிராகரித்துள்ளது குறித்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான தொடர் மீளாய்வின் போது ஐ.நா உறுப்பு நாடுகள் முன்வைத்த மிக முக்கியமான ஆறு பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.

அந்த முக்கிய பரிந்துரைகளில் நம்பகத்தன்மையுடன் கூடிய இடைக்கால நீதி மற்றும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், பேரவையின் பரிந்துரைகளை நிறைவேற்றுதல், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் காப்பாற்றப்படும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகியவை உள்ளடங்கியிருந்தன.

இலங்கை அளித்துள்ள பதிலானது நாளை (10.07.2023) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்படவுள்ளது.

இலங்கை குறித்த அந்த மீளாய்வை அல்ஜீரியா, பிரித்தானியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

ஐ.நாவின் தொடர் மீளாய்வு நடைமுறை சுயமாக முன்வந்து செய்யப்படுகின்ற மதிப்பீட்டு வழிமுறைகள் என்பதை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள இலங்கை, உறுப்பு நாடுகள் மனித உரிமைகள் கடைபிடித்து வரும் நல்ல வழிமுறைகள் மற்றும் கடப்பாடுகளுடன், கூட்டுறவு முறையில் அவற்றை பகிர்ந்துகொள்வது, உள்நாட்டில் மனித உரிமைகள் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் அவர்கள் தாமாக முன்வந்து செய்யக்கூடிய நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்குமென்றும் இலங்கை கூறியுள்ளது.

இவற்றில் பெரும்பாலான பரிந்துரைகள் சம்பிரதாய ரீதியில் உள்ளன. எனினும் மனித உரிமைகள் மற்றும் பொறுக்கூறல் தொடர்பிலானவற்றை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு முற்றாக நிராகரித்துவிட்டது.

இலங்கைக்கு மிகவும் அருகிலுள்ள இந்தியாவும் போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டு தொடர்பில் தனது கருத்து எதையும் வெளிப்படுத்தவில்லை.

எனினும் “நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களின் மனித உரிமைகள், அதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளது.

அப்படிப்பட்ட பரிந்துரையையும் முழுமையாக ஏற்காமல் பகுதி அளவிலேயே இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

மனித உரிமைகள் விடயம் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான மேற்குலக நாடுகள் கோரின.

அந்தவகையில் அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜேர்மனி, நோர்வே, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்த பரிந்துரைகள் இலங்கையால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் அனைத்திலும் பார்க்க மிகவும் தீவிரமான பரிந்துரையை அமெரிக்கா முவைத்தது.

இலங்கையில் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருக்கும் கலாசாரம் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என அமெரிக்கா பரிந்துரைத்தது.

மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல்கள் அதிலும் குறிப்பாக இனம் மற்றும் மதச்சிறுபான்மையினர் மீது இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படாத கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

பாதுகாப்பு படையினர் அரச அதிகாரிகள் உட்பட தவறிழைத்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, பொறுப்புக்கூறல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமன்றி ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களின்படி அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறியது.

ஐ.நா மனித உரிமைகள் பேராவையின் 51/1 தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென்று அவுஸ்திரேலியா, நோர்வே, நெதர்லாந்ந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கோரியுள்ளன.

இலங்கை அரசு பிரச்சினைகளுக்கான காரணத்தை கண்டறிந்து அதை புரிந்துகொண்டு அதற்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என இந்த நாடுகள் கோரியுள்ளன.

மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார குற்றங்களைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படாமல் இருக்கும் வழக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த புதிய அரசு தேசிய மட்டத்திலான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அடிப்படை நிர்வாக கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் ஆழமான சீர்திருத்தங்களை முன்னெடுத்து, கடந்த காலங்களில் இடம்பெற்ற மீறல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை அரசிற்கு கூறியுள்ளதை இந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அவுஸ்திரேலியா தனது பரிந்துரையில் “ ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 51/1ற்கு அமைய, நம்பகத்தன்மை வாய்ந்த நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்க வழிமுறைகளைகளிற்கு அமைவாக முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும்.

மேலும் ஐ.நா ஆணையத்தின் 30/1 இலக்க தீர்மானத்தில் கூறியுள்ளபடி அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை புதுப்பிக்க வேண்டும்” என்று கோரியுள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மனித உரிமைகளை பேணுதல் ஆகியவற்றிக்கு அப்பால் நெதர்லாந்து ஐ நா தீர்மானம் 51/1 மட்டுமல்லாமல் 301/1 மற்றும் 46/1 ஆகியவையும் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

ஜேர்மனியை பொறுத்தவரை காணாமல் போனவர்களிற்கான அலுவலகம் (OMP) மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் (OR) ஆகியவை சுயாதீனமாக இயங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 51/1 முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும், மேலும் நிலைமாறுகால நீதிக்கான வழிமுறை அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது பரிந்துரையில் நோர்வே தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து நாடு தனது பரிந்துரையில் இலங்கை “ஐ.நா தீர்மானம் 51/1 படி நடந்துகொண்டு, போருக்கு பின்னரான நல்லிணக்கம், உள்ளகப் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளது.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் நடா அல் நஷீத் அம்மையாரின் வாய்மொழி அறிக்கைக்கு பதிலளித்துள்ள இலங்கை, பொறுப்புக்கூறல் தொடர்பில், அதிலும் குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம் குறித்தும் தெரிவிக்கையில், “காணாமல் போனோர் தொடர்பிலான ஐ நா செயற்பாட்டு குழு தனது பார்வைக்கு கொண்டுவந்த விடயங்கள் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த அலுவலகம் 159 முறைப்படுகளுக்கு பதிலளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த அலுவலகத்திடம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான முறைப்பாடுகளுக்கு இதுவரை பதில் கூட அளிக்கப்படவில்லை. மேலும் அரசிடம் சரணடைந்த, கையளிக்கப்பட்ட அல்லது காணாமல் போனவர்களில் ஒருவரை கூட கண்டுபிடிக்கவில்லை.

காணமல் போனவர்கள் தொடர்பில் பொலிஸாரிடம் செய்யப்படும் முறைப்பாடுகள் முறையாக விசாரிக்கப்படுகிறது.

மேலும் அது அப்படியான வழக்கு விவரங்கள் இலங்கையின் தேசிய அறிக்கையில் அளிக்கப்பட்டது.

இறுதிகட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்கள் உட்பட, காணாமல் போனவர்கள் அனைவர் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை அரசு தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், போர்க்காலத்திலும் அதற்கு பின்னரும் காணாமல் போனவர்கள் அல்லது அரச படைகளிடம் கையளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாங்கள் அளித்த முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளில் எவ்விதமான முன்னேற்றம் அல்லது நேர்மையான பதில்கள் எதையும் பாதிக்கப்பட்டவர்களின் காணவில்லை அல்லது அவர்களின் குடும்பங்களிற்கு அது அளிக்கப்படவில்லை.

இதேவேளை, அண்மையில் நான்கு மனித உரிமைகள் இணைந்து மனித புதைகுழிகள் தொடர்பில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அவை தொடர்பான விசரணைகள் முடக்கப்படுவதில் அரசும் உடந்தையக உள்ளது என்பதை அம்பலப்படுத்தியது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் ஆன பிறகும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உற்றார் உறவினர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து அஞ்சுகின்றனர்.

இதனிடையே போரினால் பாதிக்கப்பட்ட நீண்டகால கோரிக்கையான நிலைமாறுகால நீதியை அளிக்க சர்வதேச பங்கேற்புடன் ஒரு பொறிமுறையை அமைப்பதற்கு பதிலாக இலங்கை அரசு தற்போது உண்மைகளை கண்டறிதல் மற்றும் நல்லிணக்கா ஆணைகுழு ஒன்று அமைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதனிடையே காணாமல் போன தமது உறவுகளை தேடி வயதான தாய்மார்கள் தலைமையிலான போரட்டாம் 2,300 நாட்களையும் கடந்து தொடருகிறது.

இலங்கையில் பெண்கள் தலைமையில் நடைபெறும் மிக நீண்டகால போராட்டமாக இது பதிவாகியுள்ளது.

போர் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் அரச பாதுகாப்பு படையினர் மீதே முதன்மையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதால், அந்த விசாரணைகளை முன்னெடுக்க அரசியல் திடசங்கற்பம் இலங்கை அரசிடம் இல்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version