அரசியல்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக உருவாகும் தனிச் சட்டம்!!!

Published

on

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக உருவாகும் தனிச் சட்டம்!!!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழில்சார் உரிமைகளையும், நலன்புரி சார் விடயங்களையும் பாதுகாப்பதற்கு தனியானதொரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு தொழில் அமைச்சின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

சட்ட மூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார இணக்கம் தெரிவித்துள்ளதாக இ.தொ.காவின் உப தலைவரும், தேசிய தொழில் ஆலோசனை சபை உறுப்பினருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இது தொடர்பில் தொழில் அமைச்சர் தலைமையில் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச தொழில் சட்டமூலம் குறித்தான வரைவு நகல் தேசிய தொழில் ஆலோசனை சபையில் இன்று (06.07.2023) சமர்ப்பிக்கப்பட்டது.

நாட்டில் நடைமுறையில் உள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனைகள், யோசனைகள் மற்றும் கருத்துகள் பல தரப்புகளிடம் இருந்தும் பெறப்பட்டன.

பல பகுதிகளாக பிரிந்திருந்த தொழில்சார் சட்டங்களையும், நடைமுறைகளையும் ஒன்றிணைந்து, நாட்டில் ஒரே தொழில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தேச வரைவு நகலே இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வரைவு நகல் தொடர்பான தமது நிலைப்பாட்டை, கருத்துகளை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய தொழில் ஆலோசனை சபை உறுப்பினர்கள் முன்வைக்க வேண்டும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாரத் அருள்சாமி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்களிப்பை பெருந்தோட்ட தொழிலாளர்களே வழங்கினர்.

எனவே, பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மற்றும் நலன்புரி விடயங்களை உள்ளடக்கிய விசேட சட்டமொன்று இயற்றப்பட வேண்டும் என இதொகாவின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதி, தொழில் அமைச்சர், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் உள்ளிட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு தற்போது வெற்றி கிட்டியுள்ளது. தொழில் சட்டத்துக்கு புறம்பாக மேலதிக சட்டமாகவே இது நடைமுறைக்கு வரும். இது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும் எனவும் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம்மூலமே நலன்புரி விடயங்கள் பாதுகாக்கப்பட்டன. எனினும், நலன்புரி விடயங்கள் முழுமையாக தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது சட்டம் ஊடாக தொழில் தொழில் பாதுகாப்பு, நலன்புரி விடயங்களை பாதுகாக்க ஏற்பாடு இடம்பெற்றுள்ளது எனவும் பாரத் அருள்சாமி குறிப்பிட்டார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version