இலங்கை
ரணிலுடன் தனிப்பட்ட முறையில் பேசத் தயாராகும் மகிந்த
ரணிலுடன் தனிப்பட்ட முறையில் பேசத் தயாராகும் மகிந்த!
மக்கள் போராட்டத்தை பயங்கரவாதிகள் ஆக்கிரமிக்க முன்னர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகள் தொடர்பில் சமுர்த்தி திட்ட சங்கத்தின் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மேலும் குறிப்பிடுகையில்,
சமுர்த்தி நலன்புரி திட்டத்துக்கு பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.
தனி வீடு, மலசலகூடம், தனிப்பட்ட குடி நீர் வசதி, கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் செல்வந்தர்களாக அடையாளப்படுத்தப்பட்டு வறுமை நிலையில் உள்ளவர்களுக்கான நலன்புரி தொகை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பயனாளர் தெரிவு விவகாரத்தில் அரசாங்கம் தவறிழைத்துள்ளது, தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்துடன் இடம்பெற்ற உள்ளக பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தினோம்.
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. நாடாளுமன்றத்திலும் எடுத்துரைத்தோம். அப்போது எமது கருத்துக்கு எதிராகவே நிதி இராஜாங்க அமைச்சர் கருத்துரைத்தார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் பயனாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து மக்கள் பிரதேச சபைகள் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டு, தகுதியற்றவர்கள் நிவாரண செயற்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை வெளிப்படையாக தெரிகிறது.
அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல விடயங்களை தெளிவுப்படுத்தினார். பாரிய குறைப்பாடு காணப்படுவதை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக உறுதியளித்தார்.
எரிபொருள், மின்சாரம் ஆகிய சேவை விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்தை பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து நாட்டில் வன்முறையை தோற்றுவித்தார்கள்.
ஆகவே தற்போது அஸ்வெசும திட்டத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கியுள்ள மக்கள் போராட்டத்தை பயங்கரவாதிகள் ஆக்கிரமிக்க முன்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம் என்பதை இதன்போது வலியுறுத்தினோம் என குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login