இலங்கை
விடுதலைப் புலிகளுக்கு எதிரான கோட்டாபயவின் செயல்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டது போன்று கடந்த வருடம் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது செயற்பட்டிருந்தால் நாடு பாரியளவிலான உயிர்களை இழந்திருக்கும் என வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
களனி பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மீண்டும் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளோம். இந்த நாட்களில், சில அரசியல் கட்சிகள் விலைவாசி குறையாததை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றன. 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட போது, மேல் மாகாண சபையின் முதலமைச்சராக பதவி வகித்து அந்த அரசாங்கத்திற்கு எதிராக நான் வெளியே வந்து போராடினேன்.
அப்போது எங்களில் சிலரால் சரியான முடிவு எடுக்க முடியவில்லை. நான் சமுதாயத்துடன் இருப்பவன். அதனால் எனக்கு அந்த பலம் இருந்தது. மக்களின் நடத்தைக்கேற்ப மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முடியும் என்பது புரிந்தது. நாடு முழுவதும் சென்று மகிந்த ராஜபக்சவுக்காக கூட்டங்களை நடத்தி அந்த சித்தாந்தத்தை வலுப்படுத்தினோம்.
நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலை ஆரம்பித்தவர்கள். ஆனால் அப்போது எங்களிடம் அரசியல் செய்வதற்கு கட்சி எதுவும் இருக்கவில்லை. ஐந்து மடங்கு சக்திகளை சேகரித்து மொட்டை உருவாக்கினோம்.
முதலில், ஒவ்வொரு கிராம சேவைப் பிரிவில் இருந்து 20 உறுப்பினர்களை ஒன்று திரட்டித் தான் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. எனவே, அதை யாராலும் உடைக்க முடியாது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் கோட்டாபய ராஜபக்சவை நியமித்தோம். அவர் நேர்மையான மனிதர்.
கோவிட்-19 காரணமாக, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் சரிந்தது. அதனை இலங்கையிலும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கோவிட் 19 காரணமாக, நம்மை விட அபிவிருத்தி அடைந்த நாடுகளில், மக்கள் தங்கள் நாட்டில் வீதிகளில் இறக்கத் தொடங்கியபோது, நாங்கள் மக்களைப் பற்றி நினைத்தோம்.
மக்களின் உயிரைக் காப்பாற்ற நாட்டை மூட முயன்றனர். நாசகாரர்கள் நாட்டை மூட வேண்டாம் என்றார்கள். ஆனால் நாட்டு மக்களுக்கு மூன்று தடுப்பூசிகளும் போடப்பட்டன. பொருளாதாரம் சரிந்தாலும் மக்களின் உயிரை காப்பாற்ற முடிந்தது.
கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய பிறகு, பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அவர்கள் உழைத்தனர். பின்னர் போராட்டம் தொடங்கியது. மின்சாரம், எரிபொருள், எரிவாயு இல்லாமல், எரிவாயு கொள்கலன்கள் வெடித்து, மக்கள் இறந்தபோது, வரிசைகள் அதிகரித்தபோது, மக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அந்த நேரத்தில் நாட்டு மக்கள் அரசாங்க மாற்றத்தைக் கோரினர்.
அரசாங்கம் 2019 இல் ஆட்சிக்கு வந்ததுடன், 2020 கோவிட் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அந்த உறவு சிறிது சிறிதாக குறைந்தது. போராட்டத்தால் நமது தலைவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். பயத்திற்காக அல்ல.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டது போன்று போராட்டத்தின் போது செயற்பட்டிருந்தால் நாடு பாரியளவிலான உயிர்களை இழந்திருக்கும். ஆனால், நாட்டைப் பற்றி நினைத்து, நாட்டு மக்களைக் காப்பாற்றிய தலைவர் தனது பதவியை விட்டுவிட்டார்.
ஒரு கட்சியாக நாங்கள் சில அடக்குமுறைகளை அனுபவித்தோம். நாங்கள் எதிர்பாராத விடயங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எங்களையும் எங்கள் கட்சி உறுப்பினர்களையும் துன்புறுத்தினார்கள்.
இந்தப் போராட்டத்தால் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது வீடுகளுக்கும் தீ வைத்தனர். எனது வீடு 77 இலும் எரிக்கப்பட்டது. இம்முறையும் தீ வைக்கப்பட்டது.
அந்த மொட்டை அழிப்பதன் மூலம் கம்பஹா மாவட்டத்தின் அரசியல் பலம் அழிக்கப்படும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிந்தது எதற்கு? கோவிட் தொற்றுநோய்களின் போது கிராம மக்களுக்கு உணவு வழங்கியதும், பொருட்களை விநியோகித்ததும் இவர்கள்தான்.
வீடுகளுக்கு தீ வைத்தது சாதாரண மக்கள் அல்ல. உருப்படாத அமைப்புகளுடன் இணைந்து இந்த வேலையைச் செய்தனர். அவர்கள் இன்று எங்கே? நாங்கள் வெளியே இறங்கி வேலை செய்கிறோம். எங்களுக்கு அடித்தவர்கள், எங்கள் வீடுகளுக்கு தீ வைத்தவர்கள் ஒளிந்திருக்கிறார்கள். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.
நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியல் செய்தவர்கள் அல்ல. அவருக்கு எதிராக அரசியல் செய்தவர்கள் நாங்கள். நாட்டில் அமைதியும், சட்டமும் ஸ்திரமற்ற நிலையில் இருக்கும்போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய தலைவரைத் தேடிக்கொண்டிருந்தோம். அரசு இயந்திரத்தை பராமரிக்கக்கூடிய தலைவரைத் தேடிக்கொண்டிருந்தோம். சவால்களை எதிர்கொள்ளும் தலைவரைத் தேடிக்கொண்டிருந்தோம். அதனால் தான் விரும்பாவிட்டாலும் நாட்டைப் பற்றி சிந்தித்து ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க முடிவு செய்தோம்.
ஓராண்டுக்கு முன்பிருந்த நாட்டின் நிலையையும், இன்றைய நாட்டின் நிலையையும் பார்க்கும்போது, நாம் எடுத்த முடிவு சரியானது என்று மகிழ்ச்சியடையலாம்.
எதிர்காலத்தில் எந்த தேர்தலுக்கும் தயாராக இருக்கிறோம். மக்கள் விடுதலை முன்னணி ஏராளமான மனித உயிர்களை அழித்த கட்சி. 87 /88 மக்கள் விடுதலை முன்னனி பிக்குமார்களையும் அதிபர்களையும் கொன்ற கட்சி. சமீப நாட்களாக மக்கள் விடுதலை முன்னணிக்கு கூட்டம் இல்லை.
அனுரகுமாரவுக்கு டீல் குமார் என்று சும்மா கூறவில்லை. அவர் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்கும் உதவினார். நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், போருக்குப் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பிய மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கும் செயற்பட்டார்கள்.
அனுரகுமாரவின் மகன் மிஹின் லங்காவில் பணியாற்றியவர். மிஹின் லங்கா நிறுவனம் மூடப்பட்ட போது அனுரகுமார தனது பிள்ளையை எயார் லங்காவில் வைப்பதற்காக மகிந்தவுடன் ஒப்பந்தம் செய்தார். அப்படியானால் அனுரகுமார எப்படி புதிய அரசியல் கலாசாரம் பற்றி ஒப்பந்தம் இல்லாமல் பேசுகிறார்? ஒரு கொலைகார அரசியல் கட்சியின் தலைவர் ஆட்சிக்கு வந்தால், தனது அதிகாரத்தை காப்பாற்ற 88/89 காலத்தை விட அதிகமான மக்களை கொன்றுவிடுவார்.
போராட்டம் தவறான திசையில் சென்றபோது, அமைதியை மதிக்கும் மக்கள் வெளியேறினர். இறுதியாக இந்தப் போராட்டம் விபச்சாரிகளாலும், பாதாள உலகத்தினராலும், போதைக்கு அடிமையானவர்களாலும் கைப்பற்றப்பட்டது. யார்? காலி முகத்திடல் கூடாரங்களில் இருந்தார்கள். அங்கிருந்தவர்களுக்கு இப்போது சமூக நோய்கள். சென்றவர்கள் கவனமாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login