இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்களமயமாக்கல்

Published

on

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதி வெளியிட்டுள்ளது.

இக்கடிதமானது துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு அனுப்பபட்டுள்ளது.

அக்கடிதத்தில், எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பலமொனதொரு திரளாக எழுவதற்கும் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தில் தவிர்க்க முடியாத குரலாக ஒலிப்பதற்கும், பல்கலைக்கழக அறிவுசார் பலமான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களான உங்கள் அனைவரதும் நேரடியான மற்றும் மறைமுகமான பங்களிப்புக்களும் ஆதரவுகளுமே காரணமாகும்.

இருப்பினும் சில விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தவும் அறியத்தருவதற்குமானதொரு சூழல் தற்போது எழுந்திருக்கின்றமையால் அதனை இந்தக் கடிதம் வாயிலாக அறியத்தருகின்றோம்.

தமிழ் மக்களின் கூட்டு உணர்வுகளோடு தொடர்புடைய தினங்களில் களியாட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களிற்கு ஒப்புதல் வழங்குவதனையும் அவற்றினை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதனையும் தவிர்க்குமாறும், அன்றைய தினங்களில் பல்கலைக்கழக நாட்காட்டியில் நிகழ்வுகள் இடம்பெறாமையை உறுதி செய்யுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

அண்மையில்க் கூட தமிழ் மக்களின் உணர்வுகளைப் உதாசீனப்படுத்தி அவமதிக்கும் விதத்தில் நிகழ்வொன்று இராணுவப் பிரசன்னத்தோடு இடம்பெற்றிருந்தது, அது தமிழ் மக்களின் ஆறாத மனங்களை மேலும் புண்படுத்தியிருந்ததோடு, பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பெரும்பாண்மையின மாணவர்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டு இடம்பெறும் மறைமுகமான சிங்களமயமாக்க முயற்சிகளால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாமையை உறுதி செய்யுமாறு வேண்டுகின்றோம்.

பல்கலைக்கழக நுழைவு என்னும் எந்தப் புள்ளியில் இனப்பிரச்சினை ஆரம்பமாகியதோ அதே புள்ளியில் மீண்டும் வந்து நிற்கின்றோமா? என்று எண்ணத் தோணுகின்றது.

தமிழ் மக்களின் உரிமைப் பயணத்தில் பலமான குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் குரலை நசுக்கும் விதமாக பெரும்பாண்மையின மாணவர்கள் திட்டமிட்ட வகையில் உள்நுழைக்கப்பட்டு வருகின்றார்கள் என்பது யாவரும் அறிந்ததே.

இவ்வாறானதொரு சூழலில் அவர்கள் பெரும்பாண்மையினைக் கைப்பற்றுவதன் ஊடாக தமிழ் மாணவர்களுக்குரிய தலைமைத்துவ வாய்ப்புக்கள் யாவும் ஜனநாயகம் என்ற போர்வையில் பறிக்கப்படுவதற்கான சூழல் எழுந்துள்ளது.

 

பௌத்த – சிங்களமயமாக்கல்

இதனால் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களுக்கென்றிருக்கும் இறுதியான ஒரேயொரு வாய்ப்பாகவிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இழக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றது.

 

தாயகத்தில் இடம்பெறும் பௌத்த – சிங்களமயமாக்கலுக்கு எதிராக யாழ் பல்கலைச் சமூகம் போராடி வருகையில், எமது விரிவுரையாளர்களே பல்கலையினுள் சிங்களமயமாக்கலை முன்னெடுக்கும் சூழல் உருவாகுமேயானால் அது ஒரு முரணான செயலாகும்.

 

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே எமக்கு அநீதி இழைக்கப்படுகிறது, எவரேனும் நீதி தாருங்கள்” என்னும் கையறு நிலைக்கு எமது தமிழ் மாணவர்களை தள்ளிவிட வேண்டாம் என்றும், இவை பொதுவெளியில் மக்கள் மன்றத்திற்குச் செல்ல முன்னர் அவ்வாறான தமிழர் விரோத முயற்சிகளை தடுத்து நிறுத்துமாறும் வேண்டிக் கொள்கிறோம் – என்றுள்ளது.

கடிதத்தின் பிரதி பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம், அனைத்துப் பீடங்களுக்குமான மாணவர் ஒன்றியங்களுக்கும் அனுப்பபட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version