இலங்கை

யாழ் பல்கலையில் மூலதனச்சந்தை புதிர் போட்டி!

Published

on

“பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மூலதனச் சந்தை தொடர்பான அறிவினைப் பெருக்குவதன் மூலம் முதலீட்டு நடவடிக்கைகளில் தேர்ச்சி பெறுதலும் எதிர்காலத்தை வடிவமைத்தலும்”  என்ற தொனிப்பொருளுடன் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் என்பன இணைந்து நடாத்தும் மூலதனச்சந்தை புதிர் போட்டி  ஆனது யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீட கலையரங்கில்  யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியிலே ஒவ்வொரு அணியிலும் 4 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் பல்கலைக்கழகத்தின் 7 பீடங்களைச் சேர்ந்த 19 அணிகள் பங்குபங்றுகின்றன. இப் புதிர்ப் போட்டிக்கான சகல ஆயத்தங்களும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீட  பீடாதிபதி பேராசிரியர் பா . நிமலதாசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கிடையிலான பங்குச் சந்தை தொடர்பான அறிவாற்றலை மேம்படுத்தி முதலீட்டினை ஊக்குவித்து இலங்கைப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதோடு எதிர்கால பங்குச் சந்தை முதலீடுகளை தூண்டும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இப்புதிர் போட்டியானது இரண்டு கட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
முதலாவது கட்டம் பீடங்களுக்கு இடையேயான போட்டிகளாகவும் அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டம் பல்கலைக்கழகங்களுக்கு இடையோயான போட்டிகளாகவும் காணப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் ஏழு சுற்றுக்கள் காணப்படுவதுடன், இப் புதிர்ப் போட்டியானது உலக சந்தை பொது அறிவு இலங்கைப் பொருளாதாரம் மற்றும் வணிகம நடப்பு விவகாரங்கள் விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்குகள் போன்ற எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும்.
பீடங்களுக்கிடையேயான போட்டியில் உயர்ந்த புள்ளிகளைப் பெறும் முதல் மூன்று அணிகள் பல்கலைகழகங்களுக்கிடையேயான போட்டிகளில் பங்கேற்கும். பீடங்களுக்கிடையேயான போட்டியில் வெற்றிபெறும் அணியானது பணப் பரிசாக ரூபா 75,000 இனை பெறுவதுடன் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான போட்டியில் வெற்றிபெறும் அணியானது பணப் பரிசாக ரூபா 300,000 இனை பெறுவதுடன் முதலாவது 2ஆம் நிலை அணியும் இரண்டாவது 2ஆம் நிலை அணியும் முறையே ரூபா 200,000 மற்றும் ரூபா 100,000 இனை பரிசாகப் பெற்றுக்கொள்ளும்.
#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version