அரசியல்

யாழிற்கு குடிநீரை கொண்டுவர நடவடிக்கை எடுங்கள்-சிவஞானம் கோரிக்கை!

Published

on

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டுவர நடவடிக்கை எடுங்கள் என வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸிடம் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய இலக்குகள் அபிலாசைகள் என்ன என்பதை நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. நீங்கள் எங்களில் ஒருவர். இரண்டு விடயங்களை நான் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளேன்.

13வது திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசுகின்றோம். நான் அதற்கு மேலாக என்னுடைய கருத்தை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.
13இன்  படி  நீங்கள் கொஞ்சம் தெளிவாகவும் இறுக்கமாக இருப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம். அந்த வகையில் இருக்கின்ற பல விடயங்கள் பிடுங்கப்பட்டுள்ளன. அவற்றை எவ்வாறு மீளப் பெறலாம் என்பது பற்றி நான் சொல்லிதான்  தெரிய வேண்டியதில்லை அது உங்களுக்கு தெரிந்த விடயமே.

சில ஆளுநர்கள் நிர்வாகதிறன் அற்ற ஆளுநராகவும் மாகாண முறை தெரியாதவர்களாகவும்  இருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு மாகாண அனுபவம் உண்டு.ஆகவே எடுத்த விடயங்கள், எடுக்கப்பட்ட விடயங்கள் அல்லது பிடுங்கப்பட்ட விடயங்களை திருப்பி பெறுவதிலே உங்களுடைய முயற்சி காணப்பட வேண்டும்.

மாகாணத்திற்குரியதாக இருப்பதை மத்தி எடுப்பதை  நாங்கள் தவிர்க்க  வேண்டும். குறிப்பாக அது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றது. மாகாணத்திற்கு உட்பட்ட விடயங்கள் எடுக்கப்படுபவற்றை தடுக்க வேண்டும். எமது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த  பெண்மணி நீங்கள்,எனவே இங்குள்ள அதிகாரிகளும் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள்.

எனவே வடக்கு மாகாண மக்களுக்கு உங்களால் முடிந்தளவு உதவுங்கள்.
அதேபோல  யாழ்ப்பாணத்திற்கான  குடிநீர் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியுடன் பேசி உரிய நடவடிக்கை எடுங்கள். குறிப்பாக இரணைமடுவில்  இருந்து குடி தண்ணீர் கொண்டு வருவதாக இருந்தது. ஆனால் அது தற்பொழுது சாத்தியமற்ற விடயமாகிவிட்டது.

யாழ்ப்பாண மக்களுக்கு தேவையான குடிநீரைக் கொண்டு வரக்கூடிய நடவடிக்கைகளை நீங்கள் உடன் செயற்படுத்துங்கள்.அதற்கு நாங்கள் எங்களாலான பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம் – என்றார்.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version